2025-இல் உலகம் முழுவதும் 17 மறைபரப்புப் பணியாளர்கள் படுகொலை!
2025-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 17 கத்தோலிக்க மறைபரப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இதில் ஆப்பிரிக்காவில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பாக நைஜீரியாவில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பீதேஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமையன்று, வன்முறை அல்லது ஏழ்மை நிலவும் பகுதிகளில் பணியாற்றி உயிரிழந்த அருள்பணியாளர்கள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், அருள்சகோதரிகள், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுநிலையினர் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆண்டு ஆய்வறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி நிறுவனம்.
மேலும் இது கடந்த 2024-ஆம் ஆண்டில் பதிவான 14 உயிரிழப்புகளை விட அதிகமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது அதன் அறிக்கை.
மறைபரப்புப் பணிகளுக்கு ஆப்பிரிக்கா தொடர்ந்து மிகவும் ஆபத்தான கண்டமாக இருந்து வருகிறது என்றும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.
பலியானவர்களில் நைஜீரிய அருள்பணித்துவ பயிற்சி மாணவர் இம்மானுவேல் அலாபி, ஹைட்டி அருட்சகோதரிகள் எவனெட் ஒனிசையர் மற்றும் ஜீன் வோல்டேர், மற்றும் பர்மிய அருள்பணியாளர் டொனால்ட் மார்ட்டின் ஆகியோர் அடங்குவர் என்று குறிப்பிட்டுள்ளது அதன் அறிக்கை.
Comments are closed.