கடவுளின் உடனிருப்பில் வாழ்வதன் மகிழ்ச்சியை அனுபவிப்போம்!
கடவுளின் உடனிருப்பில் ஒவ்வொரு நாளும் வாழ்வதன் மகிழ்ச்சியை சகோதரர் லாரன்ஸ் அவர்கள் நமக்குக் கற்பிக்கிறார்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
டிசம்பர் 18, வியாழனன்று, பிரான்ஸ் நாட்டு கார்மெல் துறவு சபைச் சகோதரர் இலாரன்ஸ் அவர்கள் எழுதிய “இறைவனின் உடனிருப்பை உணரும் பயிற்சி” (The Practice of the Presence of God ) என்ற நூலின் புதிய பதிப்பிற்காக எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
இது தனது சொந்த ஆன்மிக வாழ்க்கையை ஆழமாக மாற்றியமைத்த ஒரு நூல் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் இறைவேண்டல், ஆராதனை மற்றும் அன்பின் மூலம் கடவுளின் உடனிருப்பை விழிப்புணர்வுடன் தொடர்ந்து வாழ்வதன் புனிதத்துவத்திற்கு ஓர் எளிய ஆனால் சவாலான பாதையைக் கற்பிக்கிறார் சகோதரர் லாரன்ஸ் என்று விளக்கியுள்ளார்.
மேலும் இந்தப் பாதைக்கு வெளிப்புற நடத்தைகளால் மட்டுமல்ல, கிறிஸ்துவின் மனநிலையையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் கூடிய ஆழ்ந்த மனமாற்றம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த ஆன்மிகம் என்பது இறை ஒன்றிப்பு நெறியாளர்களுக்கு மட்டுமானதல்ல, மாறாக அனைவராலும் அடையக்கூடியது என்றும், ஏனெனில் இது அன்றாட வாழ்வில் சாதாரண பணிகளை நிறைவேற்றுவதன் வழியாக அடையக்கூடிய ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
சகோதரர் இலாரன்ஸ் அவர்களின் மகிழ்ச்சியான, பணிவான, மற்றும் நகைச்சுவை உணர்வுடன் கூடிய விசுவாசம், கடவுளைப் பற்றிய நிலையான விழிப்புணர்வு, வேலை, துன்பம் மற்றும் தவறுகளைக் கூட அருளுக்கான வாய்ப்புகளாக மாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.