நோயாளர்களே! நீங்கள் அனைவரும் கடவுளின் இதயத்தில் இருக்கிறீர்கள்!

0

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பெய்ரூத்திலுள்ள ஜால் எட் டிப்பில் (20.2 கி.மீ) உள்ள பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சபை சகோதரிகளின் இல்லத்திற்கு வந்தார். அப்போது புனித டொமினிக் அரங்கிற்குள் சென்ற திருத்தந்தை, அருள்சகோதரிகள், நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அருளுரை வழங்கினார்.

அன்புநிறை சகோதரர், சகோதரிகளே

நான் உங்களுடன் இங்கே இருப்பதிலும், இந்நாளில் இந்த மருத்துவமனையில், நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள், மற்றும் அனைத்து ஊழியர்களையும் சந்திப்பதிலும்  பெருமகிழ்வடைகிறேன். உங்கள் உள்ளங்களில் இயேசுவைத் தாங்கி பணியாற்றி வருவதை எண்ணி பூரிப்படைகின்றேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நான் உங்களுக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து, நீங்கள் என் இதயத்திலும், இறைவேண்டலிலும்  இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நீங்கள் பாடிய அழகான பாடல்களுக்கும், பாடகர் குழுவிற்கும் இசையமைப்பாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.  நீங்கள் பாடிய இந்த இனிமையான பாடல்கள் உண்மையிலேயே நம்பிக்கையின் செய்தியைப் பறைசாற்றியது.

இந்த மருத்துவமனை அருள்பணியாளர்  யாக்கூப் அவர்களால் தொடங்கப்பட்டது. ஏழைகளிடமும், துன்பப்படுபவர்களிடமும் அவர் காட்டிய அன்பு மற்றும் அவரின் தொடர் சேவையின் காரணத்தால், அவரை நினைவு கூர்வது சிறப்பானது. பிரான்சிஸ்கன் திருச்சிலுவை சபையின் சகோதரிகளே! அவர் செய்த அதே பணியை  நீங்கள் மகிழ்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செய்கிறீர்கள்.  நீங்கள் செய்யும் இந்தப் பணிக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இம்மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள்  உடனிருப்பும், நோயாளர்கள்மீது நீங்கள் காட்டும் அக்கறையும், கிறிஸ்துவின் இரக்கமுள்ள அன்பின் ஒரு தெளிவான அடையாளமாக அமைந்துள்ளது. காயமடைந்தவர்களைப் பராமரித்து, அவர்களின் காயங்களுக்கு மருந்திட்டு, உடன்நிற்கும் நல்ல சமாரியரைப் போலவே நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.

நீங்கள் பணியாற்றும் கடினமான சூழல்களை எண்ணிப் பார்க்கும்போது  சில வேளைகளில், களைப்பு அல்லது மனச்சோர்வுக்கு ஆளாகலாம். அதனை நினைத்து இந்தப் பணியில் கிடைக்கும் மகிழ்ச்சியை நீங்கள் இழந்துவிட வேண்டாம் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.