ஆகஸ்ட் 17 : நற்செய்தி வாசகம்
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“மன உறுதியோடு ஓடுவோமாக”
பொதுக் காலத்தின் இருபதாம் ஞாயிறு
I எரேமியா 38: 4-6, 8-10
II எபிரேயர் 12: 1-4
III லூக்கா 12: 49-53
“மன உறுதியோடு ஓடுவோமாக”
நாத்திகர்கள் நடுவில் கிறிஸ்தவர்:
அது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதில் பணிபுரிந்த பலரும் பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களுமாக இருந்தார்கள். அந்த நிறுவனத்தில் பணிபுரிய ஒரு கிறிஸ்தவருக்கு அழைப்பு வந்தது.
‘பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களும் பணிபுரியும் இடத்தில் கிறிஸ்தவனாகிய நான் எப்படிப் பணிபுரிவது?’ என்று சற்றுத் தயங்கிய அவர், அங்கே வழங்கப்படும் ஊதியம், மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியத்தை விடவும் கூடுதல் என்பதை அறிந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியக் கிளம்பிப் போனார். ஆனாலும் அவருக்கு அங்கு என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.
அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு, மாலை வேளையில் வீட்டிற்குத் திரும்பி வந்த அவரிடம் அவரது மனைவி, “பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களும் உள்ள உங்கள் நிறுவனத்தில் உங்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள்?” என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கேட்டாள். அதற்கு அவர், ‘நான் ஒரு கிறிஸ்தவர் என்பதை எந்தவிதத்திலும் காட்டிக்கொள்ளவே இல்லை” என்று சொல்லிக் கள்ளச் சிரிப்புச் சிரித்தார். இதைக் கேட்டு, அவரது மனைவி அதிர்ந்து போனார்.
இன்றைக்குப் ஒருசிலர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் ஏதாவது செய்யக்கூடும், நினைக்கக்கூடும் என்று தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. அதைத்தான் இந்த நிகழ்வு வேதனையோடு பதிவுசெய்கின்றது. இந்நிலையில் பொதுக் காலத்தின் இருபதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கிறிஸ்துவின்மீது நமது கண்களைப் பதிய வைத்து, நம்பிக்கை வாழ்வு என்ற பந்தயத்தில் மன உறுதியோடு ஒடுவோமாக” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கிறிஸ்துவின்மீது கண்களைப் பதிய வைப்போம்:
இன்றைய பலர் திரைப்பட நடிர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று யார்மீதெல்லாமோ தங்கள் கண்களைப் பதிய வைத்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களெல்லாம் சிறிதுநேரம் ஒளிர்ந்து அணைந்துபோய்விடும் விளக்குகள். தவிர, இவர்களெல்லாம் தங்களுக்காகவும் தங்களுடைய குடும்பத்திற்காகவும் மட்டுமே வாழ்ந்து இறந்து போகும் சாதாரண மனிதர்கள். ஆகவே, இவர்கள்மீது தங்கள் கண்களைப் பதிய வைத்து வாழ்கின்ற யாரும் அடர்ந்த காட்டிற்குள் திக்குத் திரியாமல் போக நேரிடும்.
இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவர் அல்லர். அவர் நாம் வாழ்வு பெறுவதற்காக, இழிவைச் சந்தித்தவர்; மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளானவர். இறுதியில் அவர் இரத்தத்தால் ஆன திருமுழுக்கான சிலுவைச் சாவையே ஏற்றுக்கொண்டவர். இந்த உலகில் இயேசு கிறிஸ்துவைத் தவிர நமக்காக இழிவையும் மனநெருக்கடியையும் சந்தித்து, இறுதியில் கொடிய சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட யாராவது ஒருவர் இருக்கின்றாரா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இப்படிப்பட்ட இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைத்து வாழச் சொல்கின்றது எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம். இயேசுவின்மீது நாம் ஏன் நமது கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும் என்றால், அவர் ஒருவரே, நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவரும் ஆவார்; திரைப்பட நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, அரசியல் தலைவர்களோ அல்ல.
Comments are closed.