இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 26.12.2023
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அவரது ஞானத்தையும், தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க இயலவில்லை” என திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளது.
புனித ஸ்தேவானிடம் அசைக்க முடியாத விசுவாசம் இருந்ததாலேயே அவரால் அருஞ்செயல்களையும், அருள் அடையாளங்களையும் செய்ய முடிந்தது. மேலும் தூய ஆவியினாலும் நிரப்பப் பெற்றார்.
புனித ஸ்தேவானைப் போல நாமும் ஆழமான விசுவாசத்தில் ஊன்றியிருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
“உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள்’ (யோவா 16: 33) என்பார் இயேசு.
ஆகையால், துன்பம் நிறைந்த இந்த உலகில் இன்று நாம் விழாக் கொண்டாடும் புனித ஸ்தேவானைப் போன்று இறுதிவரை மனவுறுதியுடன் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தன்னைக் கல்லால் எறிகின்றவர்களைப் பார்த்து ஸ்தேவான் உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்கிறார்.
ஸ்தேவான் சொல்லும் இந்த வார்த்தைகள், இயேசுவின் வார்த்தைகளை (லூக் 23: 34) ஒத்திருக்கின்றன.
ஸ்தேவான் இறைவனிடம் வேண்டியது, அங்கிருந்த பவுலான சவுல் மனம்மாறுவதற்கு ஓர் அடித்தளமாக அமைந்தது. நாமும் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களை பழிக்கு பழி வாங்கத் துடிக்காமல் மன்னித்து அன்பு செய்கின்றபொழுது, அங்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்ற உண்மையை உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டில் 12 மாதங்களும் பல நெருக்கடியான நேரங்களில் ஆண்டவர் நம்மோடு இருந்து நம்மைக் காத்து வழிநடத்தியதற்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் பிறந்த இயேசு பாலன் நமக்கு அருளையும், ஆசீரையும், மீட்பையும் அளிக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.