இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் ஆண்டவர் வழியில் நடந்த தோபித்து பார்வையிழந்தாலும் பொறுமையோடும், நம்பிக்கையோடும் இருந்ததைக் கண்டோம்.

“நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்” (எசா 28: 16). என்ற இறைவார்த்தையை கடைபிடித்த தோபித்து மீண்டும் பார்வை பெற்றார்.

நாமும் நமது வாழ்வில் துன்பங்களை சந்திக்கும் போது தோபித்தைப் போல பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருந்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறியதை நாம் காணலாம்.

கத்தோலிக்க கிறித்துவர்களாகிய நாம் இறைச்சட்டத்துக்கு கட்டுப்பட்டு அதன்வழி நடப்பது போல நமது தேசத்து சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

தனது திருப்பலி பிரசங்கத்தின் நடுவில் எண்ணற்ற புதுமைகளைப் புரிந்த ஆயரான இன்றைய புனிதர் நோர்பர்ட், பெண்களின் பாதுகாப்பான பிரசவத்தின் பாதுகாவலராவார்.

பிரசவத்தை எதிர் நோக்கியிருக்கும் எண்ணற்ற பெண்களின் சுக பிரசவத்திற்காக இப்புனிதர் வழி வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

ஒடிசா இரயில் விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், இவ்விபத்தில் பலியானோர் அனைவரிற் ஆன்ம நித்திய இளைப்பாற்றிக்காகவும், அவர்களது குடும்பங்களுக்கு இறைவன் ஆறுதல் அளித்திடவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதத்தின் முதல் செவ்வாயான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.