பொதுக் காலத்தின் ஒன்பதாம் வாரம்

திங்கட்கிழமை

(ஜூன் 05)

பலன் தருவோம்

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால், கனி கொடுக்கலாம்

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அழகிய வாழ்வால் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும். அதுவே அவருக்கு ஏற்புடைய வாழ்க்கையாக இருக்கும். இதற்கு எதிராக வாழும் வாழ்க்கை நிச்சயமாகக் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கையாக இருக்காது.

இன்றைய நற்செய்தியில் இயேசு கொடிய குத்தகைக்காரர் உவமைச் சொல்கின்றார். இந்த உவமையில் வரும் கொடிய குத்தகைக்காரர்(கள்) இஸ்ரயேலை ஆண்ட தலைவர்களையும்; ஏன் மக்களையும் குறிக்கின்றது. அவர்கள் உரிய காலத்தில் பலன் தராமல் வாழ்ந்து வந்தார்கள். மட்டுமல்லாமல், தங்களிடம் கடவுளின் வார்த்தையை அறிவிக்க வந்தவர்களையும் அவர்கள் கொன்று போட்டார்கள். இதனால் அவர்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்பட்டு உரிய காலத்தில் பலன் தரும் மக்களிடம் அது கொடுக்கப்படும் என்கிறார் இயேசு.

இஸ்ரயேல் மக்கள் உரிய பலன் தராமல் போனதற்கு முதன்மையான காரணம், அவர்கள் ஆண்டவருக்கு அஞ்சி வாழவில்லை என்பதே ஆகும். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 112 இல் அதன் ஆசிரியர், “ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்” என்கிறார்.

இஸ்ரயேல் மக்களின் பலர் ஆண்டவருக்கு அஞ்சி வாழாதபோது, இன்றைய முதல் முதல் வாசகத்தில் வரும் தோபித்து ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்றார். அதன் அடையாளமாக அவர் தன்னிடமிருந்த உணவை வறியவரோடு பகிர்ந்து உண்கின்றார். அதை விடவும் அவர் ஆதரவற்ற இறந்து கிடந்த ஒருவரை நல்லடக்கம் செய்கின்றார். இவ்வாறு தோபித்து ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்ததால் மிகுந்த பலன் தருகின்றார்

கடவுள் நமக்கு எத்தனையோ வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கின்றார். அப்படி இருக்கும்போது, நாம் மிகுந்த பலன் அல்லது கனி கொடுக்க வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை ஆண்டவருக்கு ஏற்புடையதாக இருக்கும். ஆகையால், நாம் மிகுந்த பலன் தருவோம், அதற்கு ஆண்டவருக்கு அஞ்சி, அவரது வழியில் நடப்போம்.

கனிகொடாத மரங்கள் வெட்டப்படும்

ஒரு வீட்டில் இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் குறும்புக்காரர்களாக இருந்தார்கள். எந்தளவுக்கு என்றால், வீட்டு மாடியில்தான் அவர்கள் இருவருடைய அறையும் இருந்ததால், வீட்டுக்குப் பின்னால் இருந்த மரத்தில் தாவிக்குதித்து, தங்கள் பெற்றோருக்குத் தெரியாமலேயே அவர்கள் வெளியே சென்று விளையாடி வந்தார்கள்.

ஒருநாள் அவர்களுடைய தந்தை, “வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மரத்தால் எந்தவொரு பயனும் இல்லை. அது இத்தனை ஆண்டு காலமாய் கனி எதுவும் தந்ததில்லை. பேசாமல் அதை வெட்டி எறிந்து விடுலாம்” என்று தாயிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இதைச் சிறுவர்கள் இருவரும் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘மரத்தை வெட்டிவிட்டால், வெளியே சென்று விளையாட முடியாதே! என்ன செய்வது?’ என்று அவர்கள் யோசித்தார்கள். கடைசியாக அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படியே அவர்கள் செய்யலாம் என்று முடிவு செய்தார்கள். அதன் நிமித்தம் அவர்கள் ஒரு பழக்கடைக்குச் சென்று, கொஞ்சம் ஆப்பிள் பழங்களை வாங்கி, அவற்றை மரத்தில் ஆங்காங்கே கட்டித் தொங்கவிட்டுவிட்டு எதுவும் நடக்காதது அமைதியாக இருந்தார்கள்.

மறுநாள் அவர்களின் தந்தை தாயை அழைத்து, “ஓர் அதிசயத்தைப் பார்த்தாயா? இத்தனை ஆண்டுகளும் நமது வீட்டுக்குப் பின்னால் இருந்த மரம் காய்க்காமல் இருந்தது அல்லவா! இப்போது அதில் பத்துக்கும் மேற்பட்ட ஆப்பிள் பழங்கள் காய்த்திருக்கின்றன; ஆனால், மாமரத்தில் எப்படி ஆப்பிள் பழங்கள் காய்க்கும்? என்றுதான் எனக்குப் புரியவே இல்லை” என்றார்.

வேடிக்கையான கதையாக இருந்தாலும், கனி கொடாத மரம் வெட்டப்படும் என்ற உண்மையை உணர்த்தும் இந்தக் கதை நமது கவனத்திற்குரியது. கடவுளின் மக்கள் கனி கொடுத்து வாழ வேண்டும். நாம் கனி கொடுக்கின்றோமா? சிந்திப்போம்.

ஆண்டவரின் வார்த்தை

“நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது” (யோவா 15: 😎.

தீர்மானங்கள்

1) கனி கொடுக்கும் வாழ்க்கையே கடவுளுக்கு உகந்தது என்பதை உணர்வோம்.

2) நம்மோடு வாழும் சக மனிதர்களுக்கு இயன்ற நன்மைகளைச் செய்வோம்.

3) நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் உண்மையாய் இருப்போம்.

Comments are closed.