ஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்
இயேசு கடல்மீது நடந்து வருவதைச் சீடர்கள் கண்டனர்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 16-21
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து, படகேறி மறுகரையிலுள்ள கப்பர்நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை. அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.
அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள். இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம் போய்ச் சேர்ந்துவிட்டது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————-
அஞ்சாதீர்கள்!
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 6: 1-7
திருப்பாடல் 33: 1-2, 4-5, 18-19 (22)
II யோவான் 6: 16-21
அஞ்சாதீர்கள்!
ஆண்டவர்மீது நம்பிக்கை வை!
மனித வாழ்க்கை பல்வேறு இன்னல்களுக்கும் இக்கட்டுகளுக்கும் உள்ளானது. இவற்றுக்கு நடுவில் ஒருவர் தொடர்ந்து பயணப்பட வேண்டுமானால், அவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது.
திருஅவை வேகமாக வளர்ந்து வந்தபோது, புதுப் புது பிரச்சனைகளும் தலைதூக்கத் தொடங்கின. குறிப்பாக, விருந்துகளில் கிரேக்க மொழி பேசும் கைம்பெண்கள் சரியாகக் கவனிக்கப்பட வில்லை என்றொரு பிரச்சனை எழுந்தது. இதனைச் சரிசெய்யும் விதமாக திருத்தூதர்கள் திருத்தொண்டர்கள் எழுவரை நியமித்து, அப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றார்கள். திருத்தூதர்கள் பெரிய பிரச்சனை வந்துவிட்டதே என்று அஞ்சவில்லை; மாறாக, அவர்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து முன்மதியோடு செயல்படுகின்றார்கள்.
இன்றைய நற்செய்தியில் சீடர்கள், கடலில் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது, இயேசு கடல்மீது நடந்து வருகின்றார். அவரைப் பார்த்துச் சீடர்கள் பேய் என்று அஞ்சுகின்றபோது, இயேசு அவர்களிடம், “நான்தான் அஞ்சாதீர்கள்” என்று அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றார்.
சீடர்கள் அஞ்சியபோது, இயேசு அவர்களிடம் அஞ்சாதீர்கள என்று சொன்னதற்குக் காரணம், இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 33 இல் இடம்பெறுவது போல, அவரது பேரன்பு அவரது மக்கள்மீது – சீடர்கள்மீது – இருப்பதால்தான்.
கடவுளின் பேரன்பு நம்மீது எப்போது உண்டு, அதனால் நாம் அவர்மீது நம்பிக்கை வைப்போம்; பதற்றமடையாமல் இருப்போம்.
அச்சத்திலிருந்து விடுதலை
ஜிம் ஒன்றொரு சிறுவன் இருந்தான். அவனுடைய தாய் அவனை மிகவும் அன்பு செய்தார். ஒருநாள் அவர் திடீரென இறந்து போனதால். அவருடைய இறப்பை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதுபோக, ‘இறந்து போன என் அம்மா விண்ணகத்திற்குச் சென்றிருப்பாரா? அல்லது பாதாளத்திற்குச் சென்றிருப்பாரா?’ என்ற கவலை அவனை மிகவும் வாட்டத் தொடங்கியது. அத்தோடு, ‘நானும் என் அம்மாவைப் போன்று ஒருநாள் இறக்க நேரிடும். அப்போது நான் எங்குச் செல்வேன்? விண்ணகத்திற்கா? அல்லது பாதாளத்திற்காக?’ என்ற கவலையும் அவனை நிம்மதி இழக்கத் செய்தது. இதனால் அவன் எப்போதும் ஒருவிதமான அச்சத்தோடு இருந்தான்.
இதையெல்லாம் பார்த்த அவனுடைய தந்தை அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ‘மருத்துவமனைக்குச் சென்றால், மருத்துவர் ஏதாவது மருந்து தருவார். தன்னுடைய பிரச்சனை தீர்ந்துவிடும்’ என்றுதான் ஜிம் தன் தந்தையோடு சென்றான். மருத்துவரோ அவனிடம் மருந்து மாத்திரை எதுவும் தாராமல், ஒரு திருவிவிலியத்தைத் தந்தார்.
‘இந்தத் திருவிவிலியத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?’ என்று முதலில் யோசித்த அவன், தற்செயலாக அதைப் புரட்டிப் பார்த்தான். அப்போது அவனுடைய பார்வையில், “வாழ்நாள் முழுவதும் சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்” (எபி 2: 15) என்ற இறைவார்த்தை பட்டது. இந்த இறைவார்த்தை அவனுக்குள் மாற்றத்தைக் கொண்டு வந்ததால், அவன் சாவு பற்றிய அச்சத்தை விலக்கினான்.
கடவுள் நம்மை எல்லாவிதமான அச்சத்திலிருந்தும் விடுவிக்கும்போது, நாம் எதைப் பற்றியும் அஞ்சத் தேவையில்லை. மன உறுதியோடு இருப்போம்.
Comments are closed.