இயேசுவை அறிவிக்கும்போது அவர் நம்மில் வாழ்கிறார்

உயிர்ப்பு நாளன்று, உயிர்த்த இயேசுவை முதன் முதலில் சந்தித்த பெண்கள் பற்றிக் கூறும் ஏப்ரல் 10, திங்கள்கிழமையின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து அந்நாளில் தன் நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்பு ஞாயிறுக்கு மறுநாளான திங்களன்று இத்தாலி முழுவதற்கும் விடுமுறையாக இருந்ததால்,  நண்பகலில் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் குழுமியிருக்க அவர்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, சோகத்தாலும் அச்சத்தாலும் முடங்கிப் போகாமல் காலையிலேயே கல்லறையை நோக்கிச் சென்றப் பெண்களைப் போன்று நாமும் உயிர்த்த இயேசுவைத் தேடிச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கல்லறையைக் காணவந்த பெண்கள் கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்தபோது அச்சமுற்றவர்களாக, அதேவேளை, பெருமகிழ்வுடன் அவ்விடயத்தை சீடர்களுக்கு உரைக்கச் செல்லும் வழியில் இயேசுவை எதிர்கொள்கிறார்கள் என்ற  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் அவரைக் குறித்து அறிவிக்கச் செல்லும்போது அவர் நம்மை எதிர்கொள்வார் என எடுத்துரைத்தார்.

இயேசுவைக் குறித்து நாம் அறிவிக்கும்போது பல்வேறு தடைகளை, சிரமங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் பலவேளைகளில் நாம் அவரை நமக்கு மட்டும் என வைத்துக்கொண்டு மௌனம் காக்கிறோம், ஆனால், நாம் அவருக்கு சான்று பகரும்போது அவரை எதிர்கொண்டு சந்தித்து பலம் பெறுகிறோம் என்பதை உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்த பெண்கள் நமக்குக் காட்டுகிறார்கள் என மேலும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.,

குழந்தை ஒன்று பிறந்தவுடன் அந்த மகிழ்ச்சிச் செய்தியை நாம் மற்றவர்களுடன் பகிர்வதுபோல், இயேசுவைப் பற்றிய உண்மையை, அதாவது, உயிர்ப்பும் வாழ்வுமான அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது அவர் நம்மில் வாழ்கிறார் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, கல்லறையை மூடியிருந்த கல்லை யார் புரட்டுவார் என்பது தெரியாதிருந்தும் கல்லறை நோக்கிச் சென்ற பெண்கள், சிலுவையில் உயிர்விட்டவர் இன்னும் உயிரோடு வாழ்கிறார் என்பதை அறிவிக்க துணிச்சலுடன் செல்வதை சுட்டிக்காட்டினார்.

அன்று இயேசுவின் கல்லறை நோக்கிச் சென்ற பெண்களைக் குறித்து அறிந்துள்ள நாம், இறுதியாக எப்போது இயேசுவுக்குச் சான்று பகர்ந்தோம், நம் வாழ்வில் தினமும் சந்திக்கும் மக்களுக்கு என்ன மகிழ்ச்சிச் செய்தியை வழங்குகின்றோம், இயேசுவை ஏற்றுக்கொண்ட நம்மில் என்ன மாற்றத்தை பிறர் காண்கின்றனர் என்ற கேள்விகளை முன்வைத்து தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.