பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறு (19-02-2023)

I லேவியர் 19: 1-2, 17-18
II 1 கொரிந்தியர் 3: 16-23
III மத்தேயு 5: 38-48
இவர்களே கடவுளின் மக்கள்!
துன்புறுத்துவோருக்காக வேண்டியவர்:
கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளிடம் மிகுந்த பற்றுக் கொண்டவர். அவரிடம் ஒரு பட்டியல் இருந்தது. அந்தப் பட்டியலில் இருந்தவர்களுக்காக அவர் தொடர்ந்து மன்றாடி வந்தார். பட்டியலில் அவரது உடன்பிறந்த சகோதரரின் பெயரும் இருந்தது.
சில மாதங்கள் கழித்து அவரது சகோதரை ஒருவர் வெட்டிக் கொன்றுவிட்டார். அந்த இழப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவருக்கு அறிமுகமான சிலர் கொலையாளியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அவருக்குத் தண்டனை வாங்கித் தருமாறு கேட்டனர். அவரோ கொலையாளிக்க்குத் தண்டனை வாங்கித் தரவில்லை. மாறாக, அவர் தான் வைத்திருந்த பட்டியலில் இருந்த இறந்துபோன தன் சகோதரின் பெயரை நீக்கிவிட்டுத் தன் சகோதரரைக் கொலை செய்த கொலையாளியின் பெயரைச் சேர்த்து, அவரின் மனமாற்றத்திற்காகக் கடவுளிடம் மன்றாடி வந்தார். கடவுளும் அவரது மன்றாட்டைக் கேட்க, கொலையாளி நல்லதொரு மனிதனாக வாழத் தொடங்கினான்.
தன் சகோதரனைக் கொலை செய்த கொலையாளியைப் பழிக்குப் பழி வாங்காமல், அவருக்காகக் கடவுளிடம் மன்றாடி, அவரை மனந்திரும்பச் செய்து, கடவுளின் மகனாக மாறினார் இந்த நிகழ்வில் வருகின்ற கல்லூரிப் பேராசிரியர். பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நாம் கடவுளின் மக்களாக மாற வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. கடவுளின் மக்களாக மாறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நாம் சிந்திப்போம்.
பழிப்புக்குப் பழி
பாபிலோனின் அரசராக இருந்தவர் ஹமுராபி. நாற்பத்து இரண்டு ஆண்டுகள் (கிமு 1792-1750) பாபிலோனை ஆட்சி செய்த இவர் சட்டங்களை வழங்கிவிட்டுப் போனார். இச்சட்டங்களுள் ஒன்றுதான், “கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்.
இச்சட்டத்தைப் பார்க்கும்போது, காட்டுமிராண்டித்தனமாக நமக்குத் தோன்றலாம்; உண்மையில், அந்தக் காலத்தில் இது பெரிய சட்டமாகக் கருதப்பட்டது. எப்படியெனில், ஓர் இனக்குழுவில் இருக்கும் ஒருவர், இன்னொரு இனக்குழுவில் இருக்கும் ஒருவரைக் கொன்றுவிட்டால், அந்த இனக்குழுவில் இருந்தவர்கள் கொலையாளியின் இனக்குழுவைக் கூண்டோடு அழித்தனர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், ஒருவரின் கொலைக்காக ஒட்டுமொத்த இனக்குழுவே அழிக்கப்பட்டது. இத்தகையதொரு போக்கை ஒழிக்கவே பாபிலோன் அரசன் ஹமுராபி இச்சட்டத்தைக் கொண்டு வந்தான். இச்சட்டம் யூதர்கள் நடுவிலும் இருந்தது (விப 21: 24).
நற்செய்தியில் இதைப் பற்றிப் பேசும்போது, “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்கள் வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்கிறார். பழிக்குப் பழி என இருந்த சூழலில், தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம் என்று சொல்லி, இயேசு உலகில் வன்முறைகள் அகன்றுபோவதற்கான முதல் வழிமுறையை முன்மொழிகின்றார்.
அன்புக்கு அன்பு
யூதர்கள் தொடக்கத்தில் ஹமுராமியின் சட்டத்தைப் பின்பற்றி வந்த சூழலில், ஆண்டவராகிய கடவுள் அவர்களிடம், “பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக!” என்கிறார்.
யூதர்கள், “உனக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு கூர்வாயாக” என்பதில் உள்ள, ‘அடுத்திருப்பவரைத் தன் இனத்தார்தான் என்று நினைத்து அவர்களை மட்டும் அன்புசெய்து, பிற இனத்தாரை வெறுத்து வந்தார்கள். நற்செய்தியில் இயேசு இதைப் பற்றிப் பேசும்போது, அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு கூர்வீர்களானால், அல்லது சொந்த இனத்தாரையே நீங்கள் அன்புகூர்வீர்களானால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? என்கிறார்.
உரோமையருக்குக் கீழ் பணியாற்றி வந்த வரிதண்டுபவர்கள் தங்கள்மீது அன்பு செலுத்தியவர்களிடம் அன்பு செலுத்தினார்கள். அது தொழில் தொடர்பானதாக இருந்தது. இது ஒன்றும் பெரியதில்லை என்கிற பொருளில், அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்தினால் உங்களுக்கு எந்தவொரு கைம்மாறும் கிடைக்காது என்கிறார் இயேசு.
வெறுப்புக்கு அன்பு
பழிக்குப் பழியென வாழக்கூடாது, அன்பு செலுத்துவோரிடம் மட்டும் அன்பு செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது என்று சொன்ன இயேசு, இறுதியாக, “உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்று சொல்லி, உண்மையான அன்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறுகின்றார். இதற்கு அவர் கடவுளை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார்.
கடவுள், ஒருவர் தீயவராக இருக்கின்றார் என்பதால் அவர்மீது தம் கதிரவனை உதித்தெழச் செய்யாமல் இருக்கவில்லை; அல்லது ஒருவர் நேர்மையற்றவராய் இருக்கின்றார் என்பதற்காக அவர்மீது மழை பெய்யச் செய்யாமலும் இருக்கவில்லை. அவர் தீயவர்மேலும் கதிரவனை உதித்தெழச் செய்கின்றார்; நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கின்றார். அதுதான் கடவுளின் இயல்பே!

Comments are closed.