இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட தொ.நூலில்,
ஆண்டவர் காயினிடம், *“நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்”* என கூறியதை வாசிக்கின்றோம்.
பல பாவங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடிய நமது சினத்தை நாம் அடக்கி ஆளத் தேவையான பொறுமையை நாம் என்றும் கைக்கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 50-20-ல்
*”உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப் பற்றி அவதூறு பேசுகின்றீர்கள்.”* என திருப்பாடல் ஆசிரியர் கூறுவதைக் காண்கிறோம்.
பிறரைப் பற்றி இழிவாகப் பேசுதல், மற்றவர் மனங்களைக் காயப்படுத்தும் சொற்களை பயன்படுத்துதல் ஆகியவை பாவம் என்று கருதாமல் இருப்பவர்கள், அவற்றை உணர்ந்து திருந்த வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்திலும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும் தூய ஆவியின் துணை வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தபட்டவர்கள் ஆகியோரின் பாதுகாவலரும், தொழுநோயாளர்களுக்கு சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான இன்றைய புனிதர் தூய சூசையப்பரின் புனிதர் இகிடியோ மரியாவிடமிருந்து செயல்களோடு கூடிய இரக்கம் என்னும் பண்பைக் கற்றுக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.