இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
“ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.” என தொ.நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.
கடவுள் பெண்ணை ஆணின் தலையிலிருந்தோ அல்லது அவனுடைய காலிலிருந்தோ உருவாக்கவில்லை; மாறாக அவனுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக உள்ள விலா எலும்பிலிருந்தே உருவாக்கினார். இதன்மூலம் ஒவ்வொரு ஆணும் தன் வாழ்க்கைத் துணையைத் தனது நெஞ்சத்திற்கு நெருக்கமாகக் கருத வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார் என கூறுவர். திருமணமான ஆண்கள் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கைத் துணையை மனதில் உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்களா? என சிந்திக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
“உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது.” என இன்றைய நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் கூறப்பட்டுள்ளது.
நமக்கு அளிக்கப்பட்ட இறைவார்த்தை நம்மை மீட்கவல்லது என்பதை உணர்ந்து இறைவார்த்தையின்படி நாம் எந்நாளும் நடந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்பபோம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே.” என இயேசுவிடம் கூறி தமது விசுவாசத்ததால் தமது மகளை குணம்பெற வைத்த கிரேக்கப் பெண்ணிடமிருந்து தளரா விசுவாசத்தை நாம் கற்றுக்கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
துருக்கி-சிரியாவில் நடந்த பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.