இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
“சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.” என வாசிக்கின்றோம்.
அன்று தனது கூடார வாயிலில் நின்ற மூன்று மனிதர்களுக்கு தனது விருந்தோம்பலினால் தூய அன்பினை வெளிப்படுத்திய ஆபிரகாமுக்கு குழந்தைப்பேறு என்ற ஆசி கிடைத்தது.
நமது அன்பினை பிறருக்கு விருந்தோம்பலில் விளங்கச் செய்ய இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
“நாம் துணிவோடு, “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்ச மாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?” என்று கூறலாம்.! என முதல் வாசகத்தில் காண்கிறோம்.
நம்மைப் படைத்த கடவுளுக்கு மட்டும் அஞ்சுவோம் என்ற கொள்கையில் நாம் உறுதியுடன் இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்தியவரும், ஆன்மாக்களின் மருத்துவரும், தொண்டையில் சிக்கும் பொருள்களை நீக்கி சுகமளிப்பதில் வல்லவரும், மறைசாட்சியாக மரித்தவருமான இன்றைய புனிதர் பிளெய்ஸை திருச்சபைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
மாதத்தின் முதல் வெள்ளியான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த்தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.