பிப்ரவரி 3 : நற்செய்தி வாசகம்

நான் வெட்டச் செய்த யோவான் இவரே! இவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்;
✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 14-29
அக்காலத்தில்
இயேசுவின் பெயர் எங்கும் பரவியது. ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான். சிலர், “இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்; இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன” என்றனர். வேறு சிலர், “இவர் எலியா” என்றனர். மற்றும் சிலர், “ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும் ஓர் இறைவாக்கினரே” என்றனர். இதைக் கேட்ட ஏரோது, “இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன். ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டுவிட்டார்” என்று கூறினான்.
இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டுமிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான். “நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன் தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்” என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————–
“திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்”
பொதுக்காலம் நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
I எபிரேயர் 13: 1-8
II மாற்கு 6: 14-29
“திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்”
ஹென்றி போஃர்டிற்கு உந்து சக்தியாக இருந்த அவரது மனைவி:
அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டு (1863-1947). இவர் தன்னுடைய வாழ்வின் தொடக்கக் காலக்கட்டத்தில் மோட்டார் துறையில் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். அவ்வாறு இவர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்பொழுது தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்தார். இதனால் இவரது உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் யாவரும் ‘இவரைப் பிழைக்கத் தெரியாதவர்’, ஒன்றுக்கும் உதவாதவர்’ என்று எள்ளி நடையாடினர். அத்தகைய தருணங்களில் இவரது மனைவிதான் இவருக்குப் பக்க பலமாக இருந்தார். பின்னாளில் மோட்டார் துறையில் ஹென்றி ஃபோர்டு அளப்பரிய சாதனைகளைச் செய்தார். இவையெல்லாவற்றிற்கும் காரணமாக இருந்தவர் இவரது மனைவி என்றால் அது மிகையில்லை.
ஆம், ஹென்றி ஃபோர்டும் அவரது மனைவியும் திருமணத்தை உயர்வாக நினைத்தார்கள். அதனாலேயே அவர்கள் தங்களது இல்லற வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு உந்து சக்தியாக இருந்தார்கள். இன்று ஆம் வாசக்க்கேட்ட முதல் வாசகம் ‘திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்’ என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று, அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” (தொநூ 2: 18) என்று பெண்ணைப் படைத்தார். மேலும் “விபச்சாரம் செய்யாதே” (விப 20: 14), “பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே” (விப 20: 17) என்று சொல்லி, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று பணித்தார். இத்தகைய பின்னணியில், இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர், “திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள்… காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்” என்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சகோதரனின் மனைவியோடு வாழ்ந்து வந்த காமுகனாகிய ஏரோதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த ஏரோது திருமணத்தை உயர்வாக எண்ணாமல், காமுகனாய் வாழ்ந்தால் அதற்கேற்ற தண்டனையைப் பெற்றான். ஆகவே, நாம் திருமணத்தை உயர்வாக மதித்து, உண்மையான அன்பில் நிலைத்திருப்போம்

Comments are closed.