இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
பாவிகள் மனம் மாற வேண்டும் என நாம் அனுதினமும் ஆண்டவரிடம் மன்றாட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
ஆயரும், ‘கிறிஸ்துமஸ் தாத்தா’ என பின் நாள்களில் அழைக்கப்பட்ட கற்பனைப் பாத்திரத்திற்கு காரணமுமான இன்றைய புனிதர் புனித நிக்கோலஸ் தாம் வாழ்ந்த காலத்தில் இரகசியமாக பரிசுகளைக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உலகெங்குமுள்ள ஏழைக் குழந்தைகளின் விருப்பங்களை இறைவன் நிறைவு செய்ய வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து
நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட முதல் செவ்வாயான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.