இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர் நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.
வாழ்வில் பல நேரங்களில் முக்கியமாக நீதியும், நேர்மையும் தவறும் இடங்களில் காது இருந்தும் கேளாதவர்களாய், வாய் இருந்தும் பேசாதவர்களாய் வாழ்ந்த தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுவதைக் காண்கின்றோம்.
இறைவன் நம் ஒவ்வொருவரின் அகக் கண்களைத் தொட்டு திறக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தனது 7-வது வயதில் மரித்து பின் இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனது சகோதரியின் செபத்தினால் அதிசயத்தக்க வகையில் உயிர் பெற்று எழுந்தவரும், இன்றைய புனிதருமான அருளாளர் மரியா ஏஞ்சலா தனது துறவற மடத்தை தனது அறிவாலும், சிறந்த ஞானத்தினாலும் சிறப்பாக வழி நடத்தியவராவார்.
துறவற மடங்களை வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நம் இறைவன் நல்ல ஞானத்தையும், இரக்கத்தையும் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
மாதத்தின் முதல் வெள்ளியான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.