டிசம்பர் 2 : நற்செய்தி வாசகம்

இயேசுவை நம்பி, பார்வையற்ற இருவர் பார்வை பெறுகின்றனர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31
அக்காலத்தில்
இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————————-
திருவருகைக் காலம் முதலாம் வாரம் வெள்ளிக்கழமை
மத்தேயு 9: 27-31
“நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?”
நிகழ்வு
வில்லி ஹோஃப்சூம்மர் (Willi Hoffsuemmer) என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய கதை இது.
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் தலைவிதியை (Fate) நேர்காணல் செய்தார். அப்பொழுது செய்தியாளர் தலைவிதியிடம், “உங்களால் எல்லாவற்றையும் வெற்றி கொள்ள முடிந்ததா?” என்றார். “ஆமாம், என்னால் அன்பு, இரக்கம், மன்னிப்பு ஆகிய எல்லாவற்றையும் எளிதாக வெற்றி கொள்ள முடிந்தது, நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர” என்று சற்று வருத்தத்தோடு சொன்னது தலைவிதி.
“உங்களால் ஏன் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடியவில்லை…?” என்று செய்தியாளர் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, தலைவிதி இவ்வாறு சொன்னது: “மற்ற பண்புகளிடம் நான் கவர்ச்சியான வார்த்தைகளில் பேசியபொழுது, அவை எளிதாக மயங்கிவிட்டன; ஆனால், நம்பிக்கையை அவ்வாறு என்னால் மயக்க முடியவில்லை. மேலும், நான் என்னுடைய முழு வலிமையையும் திரட்டிக்கொண்டு நம்பிக்கையோடு போரிட்டபொழுதுகூட, அதை என்னால் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், நம்பிக்கை மற்ற எல்லாப் பண்புகளையும்விட உறுதியானது.”
கற்பனைக் கதையாக இருந்தாலும், நம்பிக்கை என்பது எவ்வளவு உறுதியான பண்பு, அது மட்டும் நம்மிடத்தில் இருந்தால், நமக்கு எல்லா நன்மைகளுக்கும் கிடைக்கும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசுமீதுகொண்ட நம்பிக்கையினால் பார்வைபெற்ற இருவரைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
“எங்களுக்கு இரங்கும்” என்று கத்திய இரு பார்வையற்ற மனிதர்கள்
இயேசு தன்னுடைய பணிவாழ்வில் செய்த வல்ல செயல்களை, அருமடையாளங்களை இரு வகைப்படுத்தலாம். மக்கள்மீது பரிவுகொண்டு இயேசு தாமாகச் செய்த வல்ல செயல்கள் ஒருவகை. இதில், முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்றிருந்த மனிதரை இயேசு நலப்படுத்துதல் (யோவா 5: 1-9), கை சூம்பியவரை நலப்படுத்துதல் (லூக் 6: 6-11), கூன் விழுந்த பெண்மணியை நலப்படுத்துதல் (லூக் 13: 10-17) ஆகிய வல்லசெயல்கள் அடங்கும். இரண்டாவது வகை, மக்களிடம் இருந்த நம்பிக்கையைக் கண்டு இயேசு அவர்களுக்கு நலமளித்தல் அல்லது வல்ல செயலைச் செய்தல். இன்றைய நற்செய்தி வாசக வாசகத்தில் இடம்பெறும், இயேசு பார்வையற்ற இருவருக்கு பார்வையளித்தல் இதற்கு ஒரு சான்றாகும்.
இயேசு ஊரை விட்டு வெளியே போய்க்கொண்டிருக்கின்றார். அப்பொழுது பார்வையற்ற இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்கின்றனர். இயேசு மக்கள்மீது இரங்கக் கூடியவர்தான். திருவிவிலியத்தில் வருகின்ற பல நிகழ்வுகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன; ஆனால், இயேசு பார்வையற்ற இருவர்மீதும் இரங்கி, அவர்களுக்குப் பார்வையளிக்கின்றாரே, அதற்குக் காரணமாக இருந்தது என்ன என்பதைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நம்பிக்கையினால் பார்வை பெறுதல்
இயேசு தன் பின்னால் “….. எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே வந்த அந்தப் பார்வையற்ற இருவர்மீதும் மனமிரங்குகின்றார். அதனாலேயே அவர் அவர்கள் இருவரையும் தம்மிடம் வரவழைத்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்கின்றார்.
இயேசு அவர்கள் இருவரிடமும் இவ்வாறு கேட்பதற்கு முதன்மையான காரணம், இயேசு மக்கள் நடுவில் வல்ல செயல்களைச் செய்ததற்கும் செய்யாததற்கும் நம்பிக்கை என்பது நடுநாயகமாக இருந்தது என்பதால்தான். நாசரேத்தில் இருந்த மக்களிடம் இயேசு வல்ல செயல்களைச் செய்யாதற்குக் காரணம், அவர்களிடம் நம்பிக்கை இல்லாததாலேயே (மாற் 6:5); ஆனால், நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற இருவரிடமும் நம்பிக்கை இருந்தது. அதை அவர்கள் சொல்லக்கூடிய, “ஆம், ஐயா” என்ற வார்த்தைகளிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு பார்வையற்ற இருவர் தன்னிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்ததும் இயேசு அவர்களுக்குப் பார்வையளிக்கின்றார்.
நாம் பார்வையற்ற மனிதர்களைப் போன்று இயேசுவிடம் ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றோமா…? அந்த நம்பிக்கை ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1யோவா 5:5) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் இயேசுவே இறைமகன் என்று நற்செய்தியில் வருகின்ற பார்வையற்ற இருவரைப் போன்று நம்புவோம், நம்பியதை வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.