அமைதிக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்து வருகிறோம்

இத்தாலியின் Piedmont மாநிலத்திலுள்ள ஆஸ்தி நகரில் கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றியபின்பு, மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் இடம்பெறும் போர்கள் முடிவுறவேண்டும் என்று செபிப்போம் என்று கூறினார்.

தன் நெருங்கிய உறவினர் ஒருவரின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு, நவம்பர் 19 இச்சனிக்கிழமையன்று ஆஸ்தி நகருக்குச் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர மக்களின் இனிய வரவேற்பைப் பெற்று, இஞ்ஞாயிறு காலையில் அந்நகர மக்களுக்கு பெருவிழா திருப்பலியையும் நிறைவேற்றினார்.

அமைதிக்காக இறைவேண்டல்

“அமைதிக்குப் பஞ்சம்” ஏற்பட்டுள்ள காலத்தில் வாழ்ந்துவரும் நாம், உலகின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் போர்களை, குறிப்பாக உக்ரைன் போரை நினைத்துப் பார்ப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பாலஸ்தீனாவின் காசாவிலுள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் இரு நாள்களுக்குமுன்பு இடம்பெற்ற தீ விபத்தில், பத்து சிறார் உட்பட குறைந்தது 21 பேர் இறந்துள்ளதையும் மிகுந்த கவலையோடு குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் பலியானவர்கள் இறைவனில் நிறையமைதியடையவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் எனவும், வன்முறையால் பல ஆண்டுகளாகத் துன்புற்றுவரும் அம்மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை ஆற்றுவோம், மற்றும், அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் எனவும் திருத்தந்தை கூறினார்.

Comments are closed.