இன்றைய புனிதர் † நவம்பர் 22 ✠ புனிதர் செசிலியா ✠ St. Cecilia

கன்னியர் மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)
பிறப்பு: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ரோம், இத்தாலி
(Rome, Italy)
இறப்பு: நவம்பர் 22, 230
சிசிலி
(Sicily)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லத்தீன் கத்தோலிக்க திருச்சபை
(Latin Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபை
(Eastern Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox)
முக்கிய திருத்தலம்:
தூய செசிலியா தேவாலயம், ட்ரஸ்டேவெர், ரோம்
(Santa Cecilia in Trastevere, Rome)
பாதுகாவல்:
பாசுரங்கள் (Hymns), இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், “ஒமாஹா பேராயம்” (Archdiocese of Omaha), அர்ஜென்ட்டினா (Argentina), “மர் டெல் ப்லடா” – ஒரு அர்ஜென்டினிய நகரம் (Mar del Plata – An Argentinian City), ஃபிரான்ஸ் (France)
புனிதர் செசிலியா, இசைக்கலைஞர்களின் பாதுகாவலர் ஆவார். தமது திருமணத்தின்போது, தமது மனதுக்குள் கடவுளிடம் பாடினார் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருப்பலியின்போது, பெயர் சொல்லி நினைவு கூறப்படும் (அன்னை கன்னி மரியாளைத் தவிர்த்து) ஏழு பெண்களுள் செசிலியாவும் ஒருவர் ஆவார்.
அவரது சரித்திர விவரங்கள் கற்பனையாக இருப்பதாகத் தோன்றினாலும், அவரது இருப்பு மற்றும் மறைசாட்சியம், ஒரு வரலாற்று உண்மை என்றே கருதப்படுகிறது. ரோம் நகரின் “டிரஸ்டேவியர்” (She is said to have been beheaded with a sword) பகுதியிலுள்ள, நான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, “தூய செசிலியா” (Santa Cecilia) எனும் ஒரு ஆதி கிறிஸ்தவ ரோமன் தேவாலயத்தின் பக்கத்திலயே செசிலியா வசித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இசையமைப்புகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ள புனிதர் செசிலியாவின் நினைவுத் திருநாள், நவம்பர் மாதம் 22ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
ரோம் நகரின் பிரப்புக்கள் குடும்பமொன்றினைச் சேர்ந்த பெண்ணான செசிலியா, தமது கணவரான “வலேரியன்” (Valerian), கணவரின் சகோதரரான “’டிபர்ஷியஸ்” (Tiburtius), மற்றும் “மேக்சிமஸ்” (Maximus) எனும் பெயர்கொண்ட ரோம சிப்பாய் ஆகியோர் “பேரரசர் அலெக்சாண்டர் செவெரஸ்” (Emperor Alexander Severus) காலத்தில், சுமார் கி.பி. 230ம் ஆண்டில் மறைசாட்சியராக மரித்தனர்.
ஓரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விரும்பியவர் புனிதர் செசிலியா ஆவார். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை “வலேரியன்” (Valerian) என்ற “பாகன் இன பிரபுத்துவ” (Pagan Nobleman) இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அதனை செசிலியா பெரிதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியனுடன் திருமணம் செய்யவிருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.
திருமண நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிவித்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். பெற்றோர் இவரை கணவரிடம் ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.
அவள் தன் கணவனை நோக்கி, “கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு காவலராய் இருக்கிறார். எனவே, என்னுடைய கன்னிமைக்கு தீங்கிழைக்கக்கூடிய அல்லது கடவுளது கோபத்தை உம்மீது வரச்செய்யும்படியான எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது” என்றாள்.
வலேரியன், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன், “கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன்” என்றார்.
செசிலியா அதை நிரூபிக்க வேண்டுமானால், வலேரியன் முதலில் திருத்தந்தை “அர்பனிடம்” (Pope Urban) சென்று திருமுழுக்குப் பெற்று வருமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு சம்மதித்து, அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று செசிலியாவுக்கு ரோஜா மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்தியதைக் கண்டார்.
அதன்பின்னர் வலேரியன் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியன் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடை புரிந்தனர்.
செசிலியா, தான் மணந்த வலேரியனின் உதவியுடன் கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்பு செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றிப் புகழ்ந்தார்.
இவரின் பக்தியைக் கண்ட எதிரிகளில் ஒருவனான அரசு அதிகாரியான “டுர்சியஸ் அல்மசியஸ்” (Turcius Almachius) என்பவன் செசிலியாவை கூரிய குறுவாளால் மூன்றுமுறை அவரது கழுத்திலேயே குத்தினான். மரணத்தின் விளிம்பில் வீழ்ந்த செசிலியா, தம்மை தேவாலயத்திற்கு இட்டுச்செல்லுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார். அதன்பின் மூன்றே நாட்கள் உயிர்வாழ்ந்த செசிலியா மறைசாட்சியாக உயிர் துறந்தார்.
புனிதர் “கல்லிஸ்டஸ்” (Catacombs of St. Callistus) கல்லறை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட செசிலியாவின் உடல் ‘ட்ரஸ்ட்டேவேர்” எனும் இடத்திலுள்ள “தூய செசிலியா” தேவாலயத்திற்கு (Church of Santa Cecilia in Trastevere) மாற்றப்பட்டது. கி.பி. 1599ம் ஆண்டில், அவரது உடல் அழிந்துபோகாமல் உறங்குவது போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர் கிறிஸ்தவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.

Comments are closed.