அருள்பணியாளரின் உருவாக்கம், நற்செய்தி அறிவிப்புப்பணியின் மையம்

உரோம் நகரில் இலத்தீன் அமெரிக்காவின் அருள்பணித்துவப் பயிற்சிக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும், பயிற்சியாளர்களுக்கென்று, அருள்பணியாளர் திருப்பீடத் துறை நடத்தும் கருத்தரங்கில் பங்குபெறும் ஏறத்தாழ 160 உறுப்பினர்களை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் நவம்பர் 10, இவ்வியாழனன்று சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவார்த்தை மற்றும், அருளடையாளங்களால் ஆண்டவர் இயேசுவின் இருத்தலை வெளிப்படுத்தும் திருப்பணியை ஆற்றுகின்றவர்களை உருவாக்குவதில், தரமான ஒரு பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, Ratio fundamentalis institutionis sacerdotalis அதாவது அருள்பணித்துவ அழைத்தல் வாழ்வின் கொடை பற்றிய திருத்தூது அறிக்கையில், குருத்துவப் பயிற்சிக் கல்லூரிகளில் அருள்பணியாளர்களின் உருவாக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பண்புகள் பற்றி எடுத்துரைத்தார்.

அருள்பணித்துவ வாழ்வுக்கான பயிற்சி, தனித்துவமிக்கது, அவசியமானது, குழும, மற்றும், மறைப்பணிப் பண்பைக்கொண்டது என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் இறையழைத்தல் குறைவதால், இப்பயிற்சிக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள், மறைமாவட்டங்கள், மற்றும், மாநில பயிற்சிக் கல்லூரிகளுக்கு இடையே இவற்றை அமைக்கவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

இது, நாடுகளின் ஆயர் பேரவைகளின் பணியாகும் என்று கூறியத் திருத்தந்தை, அருள்பணித்துவ வாழ்வுக்குப் பயிற்சி பெறுபவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

Comments are closed.