இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்.” என்று யோபு கூறுகிறார். பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவே வரும் பணம்,பதவி, புகழ், பந்தம், பாசம் எல்லாம் நிலையற்றது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் “இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.” என்று கூறப்பட்டுள்ளது. நாம் நமது வாழ்வில் வரும் சிறு இடர்ப்பாடுகளுக்குக் கூட முணுமுணுக்காமல் ஆண்டவர் மீது ஆழ்ந்த விசுவாசம் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய புனிதர்களான கோஸ்மாஸ் மற்றும் தமியான் இரட்டையர்கள் ஏழைகளுக்கு செய்த தொண்டினால் குணமளிக்கும் வல்லமையை இறைவனிடம் இருந்து பெற்றனர். எண்ணற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மனம்மாற காரணமாக இருந்த இருவரும் மறைசாட்சிகளாக மரித்தனர். இந்த இரு புனிதர்களின் புனித வாழ்க்கையை நாம் முன்மாதிரியாகக் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.