செப்டம்பர் 22 : நற்செய்தி வாசகம்

யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ?
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 7-9
அக்காலத்தில்
நிகழ்ந்தவற்றை எல்லாம் குறுநில மன்னன் ஏரோது கேள்வியுற்று மனம் குழம்பினான். ஏனெனில் சிலர், “இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டார்” என்றனர். வேறு சிலர், “எலியா தோன்றியிருக்கிறார்” என்றனர். மற்றும் சிலர், “முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார்” என்றனர்.
ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
குற்ற உணர்விலிருந்து வெளியே வா
பொதுக் காலத்தின் இருபத்து ஐந்தாம் வாரம் வியாழக்கிழமை
I சபை உரையாளர் 1: 2-11
II லூக்கா 9: 7-9
குற்ற உணர்விலிருந்து வெளியே வா
உறுத்துவது கோலிக்குண்டு அல்ல, குற்ற உணர்வு:
அமலும் ஜோவும் நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் அவர்கள் இருவருக்குள்ளும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமல் தன்னிடமுள்ள மிட்டாய்களை ஜோவிடமும், ஜோ தன்னிடமுள்ள கோலிக்குண்டுகளை அமலிடமும் கொடுப்பதுதான் அந்த ஒப்பந்தம்.
ஒப்பந்தப்படி அமல் தன்னிடமிருந்த மிட்டாய்களை எல்லாம் ஜோவிடம் கொடுத்தான். பதிலுக்கு ஜோ தன்னிடமிருந்த கோலிக்குண்டுகளை அமலிடம் கொடுக்கவேண்டும். ஆனால், அவன் தன்னிடமிருந்த எல்லாக் கோலிக்குண்டுகளையும் அமலிடம் கொடுக்காமல், அதில் நான்கு கோலிக்குண்டுகளைத் தன்னுடைய கால் சட்டைப் பையில் மறைத்து வைத்துக்கொண்டு, மீதத்தை அவனுக்குக் கொடுத்தான்.
அன்றிரவு ஜோ தூக்கம் வராமல், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். அதைப் பார்த்துவிட்டு அவனுக்குப் பக்கத்தில் படுத்திருந்த ஜோவின் அக்கா அவனிடம், காரணத்தைக் கேட்டபோது, அன்று காலையில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான். அப்போது அவனுடைய அக்கா, “உன்னைத் தூங்கவிடாமல் உறுத்திக்கொண்டிருப்பது கோலிக்குண்டு அல்ல, உன்னுடைய குற்ற உணர்ச்சி” என்றாள். இதனால் மறுநாள் காலையில் ஜோ தான் மறைத்து வைத்திருந்த நான்கு கோலிக்குண்டுகளை அமலிடம் கொடுத்தான். அன்றிரவு அவன் நிம்மதியாகத் தூங்கினான்.
ஆம், ஜோ தன் நண்பன் அமலுக்குக் கொடுக்க வேண்டிய கோலிக்குண்டுகளைக் கொடுக்காததால், குற்ற உணர்ச்சியினால் நிம்ம்மதியாகத் தூங்க முடியவில்லை. இன்றைய நற்செய்தியில் ஏரோது இயேசுவின் பெயரைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியினால் தவிக்கின்றான். அவனுடைய அந்தக் குற்ற உணர்சிக்குக் காரணம் என்ன, குற்ற உணர்ச்சியிலிருந்து எவ்வாறு நாம் வெளிவருவது என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஏரோது தன் சகோதரன் பிலிப்பின் மனைவி ஏரோதியாவோடு வாழ்ந்து வந்தான். இதைத் தவறு என்று சுட்டிக்காட்டினார் திருமுழுக்கு யோவான். அதனால் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் இயேசு தன்னுடைய சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களை இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கச் சொல்லியிருந்தால், மக்கள், ‘இறந்த யோவான் உயிருடன் எழுப்பட்டார்” என்று பேசிக் கொள்கின்றார்கள். இதை அறிய வரும் ஏரோது, “யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!” என்று அவனைக் காண வழி தேடுகின்றான்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஏரோது மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கவேண்டும். அவன் அவ்வாறு இல்லாததால் திருமுழுக்கு யோவான் அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றார் .அதை முன்னிட்டாவது அவன் தன் தவற்றைத் திருத்தியிருக்கலாம்; அவனோ தன் தவற்றைத் திருத்திக் கொள்ளாமல், திருமுழுக்கு யோவானைக் கொன்று போட்டு மேலும் தவறு செய்கின்றான். அதன்பிறகு இயேசுவைப் பற்றிக் கேள்விப்படும் அவன் அவரிடம் சென்று , சக்கேயுவைப் போன்று தன் பாவத்தை அறிக்கையிட்டு மனம்மாறினானா? என்றால் அதுவும் இல்லை. இப்படி அவன் தவறைத் திருத்திக் கொள்ளாமல், குற்ற உணர்ச்சியோடு வாழ்கின்றான்.
சபை உரையாளர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் அதன் ஆசிரியர், “வீண், முற்றிலும் வீண்” என்கிறார். சாலமோன் அரசரால், அவருடைய வாழ்வின் இறுதிக் காலகட்டத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் சபை உரையாளர் நூல், அவருடைய வாழ்வில் ஏற்பட்ட வெறுமையை உணர்த்துகின்றது. ஆம், கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை வாழாமல், அதற்கு முற்றிலும் எதிரான வாழ்க்கை வாழ்ந்தால் எல்லாமே வீண்தான். எனவே, நாம் பாவத்தை விட்டுவிட்டுக் கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 பாவம் ஒரு நச்சுக் கிருமி, அது ஒருவரின் ஆன்மாவை முற்றிலும் அழித்து விடும்.
 பாவத்தை அறிக்கையிட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை வாழ்வதுதான் கடவுளுக்கு உகந்தது.
 திருஅவை ஒப்புரவு அருளடையாளம் என்ற உயர்ந்த ஓர் அருளடையாளத்தைத் தந்திருக்கின்றது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் குற்ற உணர்ச்சியால் வேதனைப்பட வேண்டிய தேவையில்லை.
இறைவாக்கு:
‘நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்’ (மத் 3:8) என்பார் திருமுழுக்கு யோவான். எனவே, நாம் தவறு செய்ய நேர்ந்தாலும் அதை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு, பாவ மன்னிப்புப் பெற்று, புதியதொரு வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.