வாசக மறையுரை (செப்டம்பர் 07)

பொதுக் காலத்தின் இருபத்து மூன்றாம் வாரம்
புதன்கிழமை
I 1 கொரிந்தியர் 7: 25-31
II லூக்கா 6: 20-26
“நீங்கள் பேறுபெற்றோர்”
அரசரும் அவரது மகனும்:
முன்பொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தையே இல்லை. அதன் நிமித்தம் அவர் தன்னுடைய நாட்டில் இருந்த தலைசிறந்த மருத்துவர்களை எல்லாம் அரமணைக்கு வரவழைத்து அவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை உண்டு வந்தார்.
ஒரு வழியாக அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதுவும் கால் ஊனமாகப் பிறந்ததால், அவரது மனம் சுக்கு நூறாக உடைந்து போனது. அப்போது அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். யாவருடைய வார்த்தையும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. இந்நிலையில் அவரிடம் வந்த ஒரு சிற்பி, “உங்களுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள். அதைப் போன்று நான் சிற்பம் வடித்துத் தருகின்றேன். அதை பார்க்கும் உங்கள் மகன் நிச்சயம் அதைப் போல் ஆவான்” என்றார்.
சிற்பி சொன்ன யோசனை அரசருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று சிற்பியிடம் சொல்ல, சிற்பியும் அரசர் சொன்ன தோற்றத்துடன் ஒரு சிற்பத்தை வடித்துத் தந்தார். அதை அரண்மனையின் முன்னே வைத்த அரசர் தன்னுடைய மகன் மெல்ல வளர்ந்து வந்தபோது, அவனைச் சக்கர நாற்காலியில் வைத்துக் கொண்டு, “இந்தச் சிற்பத்தில் இருப்பது நீதான். இதில் உள்ளதைப் போன்று நீ கம்பீரமாக எழுந்து நிற்கவேண்டும்” என்றார்.
இதையடுத்து வந்த நாள்களில் இளவரசன் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிற்பத்தைச் சுற்றி சுற்றி வந்தான். சில சமயங்களில் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முயன்றபோது கீழே விழுந்தான். ஆனாலும் அவன் தன்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. ஒரு நாள் அவன் சக்கர நாற்காலியிலிருந்து எழுந்துபோது, அவனால் எழ முடிந்தது. உடனே அவன் தன்னுடைய உருவம் பொறிக்கப்பட்ட சிற்பத்தை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துக் கொண்டான். இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அரசர் தான் விரும்பியது போல் தன் மகன் ஆகிவிட்டான் என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்
ஆம், இந்த நிகழ்வில் வரும் அரசர் தன்னுடைய மகன் எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ அப்படியொரு சிற்பத்தைச் செய்துவைத்து, அதில் இருப்பதைப் போன்று தன்னுடைய மகனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். கடவுளும் தன் மக்களாகிய ஒவ்வொருவரும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக அவர் கொடுத்திருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் ‘சமவெளிப் பொழிவு’. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தன்னுடைய ‘Jesus of Nazareth’ என்ற நூலில் இப்படியொரு செய்தியைக் குறிப்பிடுவார்: “இயேசுவின் மலைப்பொழிவு, அல்லது சமவெளிப்பொழிவு அவரது தன்னிலை விளக்கமே.” இக்கூற்று உண்மைதான் என்பதை அதை ஆழமாகப் படித்துப் பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம்.
மத்தேயு நற்செய்தியில் இடம்பெறும் மலைப்பொழிவைவிடவும், லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவு சிறிதாக இருந்தாலும், அதில் இயேசு நேரடியாக நம்மிடம் பேசுவது போன்று இருக்கின்றது. மேலும் ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்போர், வெறுத்து ஒதுக்கப்படுவோர் யாவரும் இயேசுவை அப்படியே நம் கண்முன்னால் நிறுத்துகிறார்கள். இயேசு செல்வந்தராய் இருந்தும் நமக்காக ஏழையானார்; அவர் நீதிக்காக வேட்கை கொண்டார்; அவர் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். இப்படியெல்லாம் இயேசு இருந்தார் எனில், அவரைப் போன்று நாம் வாழ்ந்தால் நிச்சயம் பேறுபெற்றோர் ஆவோம்.
இன்றைய முதல் வாசகம், “இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் இராது” என்ற வார்த்தைகளோடு முடிகின்றது. அதனால் நாம் உலகப் போக்கின்படி ஒழுகாமல், இயேசுவின் வழியில் நடந்து பேறுபெற்றோர் ஆவோம்.
சிந்தனைக்கு:
கடவுள் முன்னிலையில் செல்வந்தராய் இருப்பதுதான் மிகப்பெரிய பேறு!
இயேசுதான் நமக்கு மிகப்பெரிய முன்மாதிரி. ஏனெனில், அவரே சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினர்.
இவ்வுலகில் கொடுத்து வாழ்பவர்; மறு உலகில் வாழக் கொடுத்து வைத்திருக்கின்றார்.
இறைவாக்கு:
‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’ (நீமொ 22:9) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் கருணையும் அன்பும் நிறைந்தவர்களாய் இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.