டிஜிட்டல் ஊடகம் எழுப்பியுள்ள அறநெறி பிரச்சனைகள்

ஊடக உலகில் நிலவும், கேடுவிளைவிக்கும் தகவல்கள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள், பொய்யான செய்திகள் போன்றவற்றுக்கு எதிராக, SIGNIS எனப்படும் உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தொடர்பு அரசு-சாரா அமைப்பு முக்கிய பங்காற்ற முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தென் கொரியாவின் செயோல் நகரில், வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல், 18ஆம் தேதி வரை SIGNIS அமைப்பு நடத்துகின்ற பன்னாட்டு மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிஜிட்டல் உலகம் முன்வைத்துள்ள கடுமையான அறநெறி சார்ந்த பிரச்சனைகள் குறித்த தன் சிந்தனைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

நவீன சமூகத்தொடர்பு சாதனங்கள், நம் மனிதக் குடும்பத்திற்குள் ஒன்றிப்பு மற்றும், உரையாடலை ஊக்குவிப்பதற்கு சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றபோதிலும், அவை, வெறுப்பைத் தூண்டுகின்ற மற்றும், போலிச் செய்திகளை வழங்குகின்ற கருவிகளாகவும் மாறுகின்றன என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

“டிஜிட்டல் உலகில் அமைதி” என்ற தலைப்பில் இவ்வுலக மாநாடு நடைபெறவிருப்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நம் உலகில், வன்முறை மற்றும், பகைமை உணர்வுகள், புதிதாக வெடித்துள்ள இந்நாள்களில் இத்தகைய தலைப்பு மிகவும் பொருத்தமானதே என்று கூறியுள்ளார்.

கடுமையான அறநெறி சார்ந்த விவகாரங்கள்

இன்றைய டிஜிட்டல் ஊடகம், குறிப்பாக, சமூக ஊடகம் எழுப்பியுள்ள பல கடுமையான அறநெறி சார்ந்த விவகாரங்களை, ஊடகவியலாளர்களும், மனித உறவுகளின் உண்மையான தன்மையை மதிப்பவர்களும், ஞானம், மற்றும், தெளிந்துதேர்வுசெய்யும் பண்புகளால் எதிர்கொள்ளுமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

SIGNIS அமைப்பினர், இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு முக்கியமான பங்கை, குறிப்பாக, ஊடகக் கல்வி, கத்தோலிக்க ஊடக வலைத்தள அமைப்பு போன்றவை வழியாகக் கொண்டிருக்கின்றனர் என்றுரைத்துள்ள திருத்தந்தை, இதன் வழியாக அவர்கள், ஊடகத்துறையில் நிலவும் பொய்யான தகவல்களுக்கு எதிராகச் செயல்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

போலியானவற்றிலிருந்து உண்மையையும், தவறானவற்றிலிருந்து சரியானதையும், தீமையான செய்திகளிலிருந்து நன்மையையும் கண்டுணரவேண்டும் என்று SIGNIS அமைப்பினரை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, நீதி, சமூக நல்லிணக்கம், மற்றும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை மதித்தல் ஆகியவற்றுக்காக இந்த அமைப்பினர் பணியாற்றிவருவதையும் பாராட்டியுள்ளார்.

இவ்வுலகில் பல சமூகங்கள், டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்த இயலாமல் உள்ளன, அவற்றுக்கு இந்த அமைப்பினர் உதவுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உற்றுக்கேட்டலின் மதிப்பையும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

Comments are closed.