கொல்லப்பட்ட அருள்பணியாளர்களின் உடல்கள் திரும்ப ஒப்படைக்கப்பட

இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, மெக்சிகோ இயேசு சபை மறைமாநிலத் தலைவர் அருள்பணி Luis Gerardo Moro Madrid அவர்கள், ஆயுதம் ஏந்திய மனிதர்களால் அகற்றப்பட்டுள்ள இவ்வருள்பணியாளர்களின் உடல்கள் திரும்ப ஒப்படைக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கொலை குறித்து நீதி விசாரணை இடம்பெறுவேண்டும் என்றும், இது போன்ற துயரங்களை ஏற்படுத்தும் வன்முறைகள், Sierra Tarahumaraவில் மட்டுமன்றி, நாட்டின் பல மாநிலங்களில் இடம்பெறுகின்றன, ஆனால் இவை புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

எங்கள் சகோதரர்கள் போன்று, நாட்டில் தினமும் ஆண்களும் பெண்களும் கொல்லப்படுகின்றனர் என்றும், சமுதாயத்தைப் புண்படுத்தும் இவ்வன்முறையின்முன் நாங்கள் மௌனம் காக்கமாட்டோம் என்றும், மேய்ப்புப்பணி, கல்வி மற்றும், சமூகநலப்பணிகள் வழியாக, நீதி, ஒப்புரவு, மற்றும், அமைதிக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்றும், மெக்சிகோ இயேசு சபையினர் உறுதி கூறியுள்ளனர்.

அருள்பணியாளர்கள் Campos, Mora ஆகிய இருவரின் கிறிஸ்தவ வாழ்வின் சாட்சியங்கள், சமுதாயத்தில் மிகவும் பாதுகாப்பற்ற சூழல்களில் வாழ்கின்ற மக்களுக்குப் பணியாற்ற தங்களையே அர்ப்பணிக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, நல்தூண்டுதலாய் தொடர்ந்து அமையும் என்ற இயேசு சபையினரின் நம்பிக்கையையும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

இவ்வருள்பணியாளர்கள் பணியாற்றிய பங்குத்தளத்திலுள்ள Esteban Cornejo, Jesús Reyes, Jesús Zaglul ஆகிய மூன்று இயேசு சபையினர், மற்றும், மேய்ப்புப்பணி குழு ஆகியோரின் பாதுகாப்புக்காக, மத்திய மற்றும், மாநில அரசுகளின் அதிகாரிகளோடு இயேசு சபையினர் பணியாற்றி வருகின்றனர் எனவும், அருள்பணி மத்ரித் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 20, இத்திங்கள் பிற்பகலில், மெக்சிகோ நாட்டின் Chihuahua மாநிலத்தின் Cerocahui நகரில் ஆலயத்திற்குள் 79 வயது நிரம்பிய அருள்பணி Javier Campos Morales அவர்களும், 80 வயது நிரம்பிய அருள்பணி Joaquín César Mora Salazar அவர்களும், பொதுநிலையினர் ஒருவரும் ஆயுதம் தாங்கிய மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments are closed.