ஜூன் 18 : நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குக் கூறியது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா?
ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் சனிக்கிழமை
மத்தேயு 6: 24-34
“அவற்றை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா?”
நிகழ்வு
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமா (Oklahoma) நகரில் ஆயராக இருந்தவர் ஆயர் வில்லியம் ஆல்பர்ட் கோயல் (William Alfred Quayle 1860- 1925). ஒருநாள் இரவு இவர் ‘நாளை என்ன நடக்குமோ?’ என்று மிகவும் கவலைப்பட்டு கொண்டு, தூக்கம் வராமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஏதோ ஒரு குரல், “கோயல்! நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இந்த உலகையும் உன்னையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றேன். நீ நிம்மதியாகத் தூங்கு” என்று ஒலித்தது. பேசுவது இறைவன்தான் என்பதை உணர்ந்த கோயல், நிம்மதியாகப் படுத்துத் தூங்கினார்.
மறுநாள் இவர் தூங்கி எழுந்தபொழுது, ‘இதெல்லாம் நடந்துவிடுமோ’ என்று அஞ்சிய எதுவும் நடக்கவில்லை. உடனே இவர், இந்த உலகையும் தன்னையும் ஆபத்திலிருந்து காத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். (A Source – Book of Inspiration – J. Maurus)
ஆம், நம்மைக் கண்ணின் கருவிழி போல இறைவன் காத்துக்கொண்டிருக்கும்பொழுது, நாம் எதற்குக் கவலைப்படவேண்டும் என்ற செய்தியைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாகவும் ஆண்டவர் இயேசு நமக்கு இதே செய்தியைத்தான் கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாருக்கும் தக்க வேளையில் உணவளிக்கும் இறைவன்
“எல்லா உயிர்களின் கண்களும் உம்மையே நோக்கியிருக்கின்றன. தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்” (திபா 145: 15) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுவார். இவ்வார்த்தைகள் சாதாரணமாக எழுதப்பட்ட வார்த்தைகள் என்று கடந்து போய்விட முடியாது. கடவுளின் பாராமரிப்பையும் பாதுகாப்பையும் உணர்ந்த ஒருவரால்தான் இப்படி எழுதியிருக்க முடியும்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னுடைய ‘சீடர்களைப்’ பார்த்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வதற்குக் காரணம், வானத்துப் பறவைகளுக்கு உணவளித்து, வயல்வெளி மலர்களைப் பராமரிக்கும் இறைவன், அவற்றை விட மேலானவர்களாக இருக்கும் மனிதர்களை நிச்சயம் பராமரிப்பார் என்பதால்தான். இது தொடர்பாக ஆஸ்வால்ட் சாம்பர்ஸ் என்ற எழுத்தாளர் குறிப்பிடும்பொழுது, “நம்முடைய கவலைகளுக்கெல்லாம் காரணம், கடவுளின் பராமரிப்பை நாம் உணராததுதான்” என்பார். ஆகவே, நாம் கடவுளின் பராமரிப்பை உணர்ந்து வாழத் தொடங்கினால், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை என்பது உறுதியாகின்றது.
கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை
தன்னுடைய சீடர்கள் கவலைப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்கு இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது காரணம், கவலைப்படுவதால், நம்முடைய உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியாது (லூக் 12: 25) என்பதால்தான். இன்றைக்குப் பலருடைய கவலைக்கான காரணத்தை நாம் விசாரித்துப் பார்த்தோமெனில், அது மிகவும் அற்பமானதாகவும், இதற்கெல்லாமா கவலைப்படுவார்கள் என்று நாம் வியப்பாக இருக்கும். இயேசு சொல்வதுபோல், கவலைப்படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை நாம் உணருகின்ற வேளையில், நாம் எதற்குக் கவலைப்படமாட்டோம்.
கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடினால், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்
நாம் கவலையில்லாமல் இருப்பதற்கு இயேசு சொல்லக்கூடிய மூன்றாவது காரணம் மிகவும் முக்கியமானது. அதுதான் அனைத்திற்கும் மேலாக, கடவுளுடைய ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுதல்.
எவர் ஒருவர் கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுகின்றாரோ, அவரை கடவுள் பார்த்துக்கொள்வார். மட்டுமல்லாமல், அவர் உணவு, உடை, இன்னபிறவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கத் தேவையே இல்லை. பலருக்குத் தங்களுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதுதான் மிகப்பெரிய பிரச்சனையே! அற்பச் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டுப் பலர் கவலைக்கு மேல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். என்றைக்கு ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவற்றை நாடுகின்றாரோ, அன்றைக்கு அவருக்குக் கவலைப்படுவதற்கு நேரமே இருக்காது என்று சொல்லிவிடலாம்.
இது தொடர்பாக பி.சி.போஃர்பஸ் என்ற அறிஞர் குறிப்பிடும்பொழுது, “உங்களால் சிறந்ததை இன்றைக்குச் செய்ய முடியுமென்றால், நீங்கள் நாளைய நாளைக் குறித்துக் கவலைப் பட்டுக்கொண்டிருக்கமாட்டீர்கள்” என்பார். ஆம், நாம் நமக்கு எல்லாவிதமான ஆசிகளையும் தரக்கூடிய கடவுளின் திருவுளத்தை, அவருக்குக் ஏற்புடையவற்றை இன்றைக்கே செய்ய முடியுமென்றால், நாளைய நாளைக் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆகையால், நாம் கடவுளின் ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடி, கவலையில்லா வாழ்க்கை வாழ்வோம்.
சிந்தனை
‘கடவுள்மீது நம்பிக்கை வைத்து வாழ்பவர் கவலைப்படுவதில்லை. கவலைப்படுகின்ற யாரும் கடவுள்மீது நம்பிக்கை வைப்பதில்லை’ என்பார் ஜார்ஜ் முல்லர். நாம் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம். அதன்மூலம் இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.