ஜூன் 16 : நற்செய்தி வாசகம்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.
மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
பொதுக்காலம் பதினொன்றாம் வாரம் வியாழக்கிழமை
மத்தேயு 6: 7-15
“விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே”
நிகழ்வு
மின் தந்தியைக் (Electrical Telegraph) கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சார்ந்த சாமுவேல் எஃப்.பி.மோர்ஸ் (Samuel F. B. Morse 1791-1872).
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் இவரிடம், “உங்களுடைய ஆராய்ச்சியின்பொழுது எப்பொழுதாவது உங்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றதா?” என்றார். அதற்கு மோர்ஸ் அவரிடம், “ஒருமுறை அல்ல, பல முறை அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது?” என்றார். “அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று செய்தியாளர் மோர்சிடம் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, அவர் இப்படிச் சொன்னார்: “என்னுடைய ஆராய்ச்சியின்பொழுது, அடுத்து என்ன செய்வது என்ற குழம்பம் ஏற்படுகின்றபொழுது, நான் ‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே’ என்ற இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டலைச் சொல்லி, ‘இறைவா! எனக்கு நல்வழியைக் காட்டும்’ என்று சொல்லி வேண்டுவேன். உடனே வழி பிறக்கும்.”
மோர்ஸ் இப்படிச் சொல்லி முடித்ததும், அவரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் மிகவும் ஆச்சரியப்பட்டார். (101 Stories for you and me – J.P. Vaswani)
ஆம். மிகப்பெரிய கண்டுபிடிப்பாளரும் ஆராய்ச்சியாளருமான மோர்சிற்கு, இயேசு கற்றுக்கொடுத்த ‘விண்ணுலகிலிருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற இறைவேண்டல் புதிய வழியைக் காட்டியது என்றால், நமக்கும் அது புதிய வழியைக் காட்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நற்செய்தியில் இயேசு, இறைவனிடம் நாம் எப்படி மன்றாடவேண்டும் என்பதைக் கற்றுத் தருகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மிகுதியான வார்த்தைகள் அடுக்குவதல்ல இறைவேண்டல்
நேற்றைய நற்செய்தியில், அறச் செயல்களை எப்படிச் செய்யவேண்டும் என்றும், நோன்பு எப்படி மேற்கொள்ளவேண்டும் என்றும் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தியில், இறைவேண்டல் எப்படிச் செய்யவேண்டும் என்று பேசுகின்றார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள், மக்கள் பார்க்கவேண்டும் என்றே இறைவேண்டல் செய்தார்கள். மட்டுமல்லாமல், தங்களுடைய இறைவேண்டல்களில் அவர்கள் மிகுதியாக சொற்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். இப்படிச் செய்வதன்மூலம் அவர்கள் தங்களுடைய வேண்டுதல் கேட்கப்படும் என்று நினைத்தார்கள். ஆனால், ஆண்டவர் இயேசு, மக்கள் பார்க்கவேண்டும் என்று செய்யப்படும் இறைவேண்டலுக்கு இறைவனிடமிருந்து கைம்மாறு கிடைக்காது என்றுசொல்லி, மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் மட்டும் அது நல்ல இறைவேண்டல் என்று நினைக்கவேண்டாம் என மறைமுகமாக எடுத்துச் சொல்கின்றார்.
இயேசுவைப் பொருத்தவரையில், இறைவேண்டல் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நடக்கும் உரையாடல். அதை நாம் இயேசுவின் வாழ்விலிருந்தும், இன்றைய நற்செய்தியில் வெளிப்படும் வார்த்தைகளிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.
இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, நமக்கு அடுத்த இடம் கொடுப்பது இறைவேண்டல்
இறைவேண்டல் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, “ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்” என்று சொல்லி, இயேசு நமக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தருகின்றார்.
இயேசு கற்றுத் தரும் இறைவேண்டலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதல் பகுதி இறைவனைப் போற்றுவதாகவும், இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகளுக்காக வேண்டுவதாகவும் இருக்கின்றது. ஆம், நம்முடைய ஆன்மிக வாழ்விலும் சரி, அன்றாட வாழ்விலும் சரி, இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளத்தை நிறைவேற்றி வாழவேண்டும் என்று இயேசு கற்றுத்தரும் இறைவேண்டல் நமக்கு அழகாக எடுத்துக்கூறுகின்றது. இன்னும் சொல்லப்போனால், எப்பொழுது நாம் இறைவனின் திருவுளம் நிறைவேற உழைக்கின்றோமோ, அப்பொழுது நம்முடைய வேண்டுதல்களும் தேவைகளும் நிறைவேறும் என்பது உறுதி. ஆகையால், நாம் இறைவனுக்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளம் நிறைவேற, நாம் அவருடைய கருவிகளாக இருந்து செயல்பட முன்வரவேண்டும்
பல நேரங்களில் நாம் நம்முடைய விருப்பத்தையும் தேவையையும் முன்னிலைப் படுத்தியே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் கேட்குமுன்னரே, நம்முடைய தேவைகளை நமது விண்ணகத் தந்தை அறிந்திருக்கின்றார். அப்படியெனில், நாம் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவருடைய திருவுளம் நிறைவேற உழைபாதே சாலச் சிறந்தது.
சிந்தனை
‘இறைவேண்டல் என்பது நம்பிக்கையின் உயிர் மூச்சாகும். அது இறைவனில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களிலிருந்து, இறைவனை நோக்கி எழும் அழுகுரலாகும்’ என்பார் திருத்தத்தை பிரான்சிஸ். ஆகையால், நம்முடைய நம்பிக்கையின் உயிர்மூச்சாக இருக்கும் இறைவேண்டலை இறைவனை நோக்கி எழுப்பி, அவர் காட்டும் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.