வாசக மறையுரை (ஜூன் 16)

பொதுக் காலத்தின் பதினொன்றாம் வாரம்
வியாழக்கிழமை
I சீராக்கின் ஞான நூல் 48: 1-15
II மத்தேயு 6: 7-15
இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல்
சிறுமியின் இறைவேண்டல்:
இரவு உணவு முடிந்ததும் கிறிஸ்டோபரும் அவருடைய மனைவியும் தங்கள் அறைக்குச் செல்ல, அவர்களின் ஆறு வயது மகள் ஜெசி தன்னுடைய அறைக்குச் சென்றாள்.
சிறிது நேரம் கழித்து, தற்செயலாக அறையை விட்டு வெளியே வந்த கிறிஸ்டோபர், மகளின் அறை திறந்தே இருப்பதைக் கண்டு, அந்த வழியாக வந்தார். அறையில் ஜெசி முழந்தாள்படியிட்டிருந்தாள். அத்தோடு அவள், ‘அ, ஆ, இ, ஈ, உ, ஊ…’ என ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக் கொண்டிருந்தாள். கிறிஸ்டோபருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் அவர் அவளைத் தொந்தரவு செய்யாமல், ‘எதுவாயிருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம்’ என்று தன்னுடைய அறைக்குத் திரும்பி வந்துவிட்டார்.
மறுநாள் காலையில், கிறிஸ்டோபர் ஜெசியிடம், “நேற்று இரவு நீ முழந்தாள் படியிட்டு ‘அ, ஆ, இ, ஈ, உ, ஊ’ என்று சொல்லிக் கொண்டிருந்தாயே! கடவுளிடம் வேண்டுகின்றாய் என்று எனக்குத் தெரிந்தது. ஆனால், எதற்காக நீ ‘அ, ஆ, இ, ஈ, உ, ஊ’ என்று சொன்னாய் என்றுதான் தெரியவில்லை” என்றார். அதற்கு ஜெசி அவரிடம், “அப்பா! நான் கடவுளிடம் வேண்டும்போது எப்படி வேண்ட வேண்டும் என்று தெரியவில்லை. அதனால்தான் அ, ஆ, இ, ஈ, உ, ஊ என்று ஒவ்வொரு எழுத்தாகச் சொன்னேன். கடவுள் எல்லாம் வல்லவர்! நிச்சயம் அவர் நான் சொன்ன எழுத்துக்களை எல்லாம் ஒன்று சேர்த்து, அவற்றை ஒரு நல்ல இறைவேண்டலாக மாற்றியமைத்துக் கொள்வார்!” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
ஆம், கடவுள் நாம் அவரிடம் ஏறெடுக்கும் வேண்டலை நிச்சயம் கேட்பார். இன்றைய இறைவார்த்தை இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பலரும், இறைவேண்டல் என்றால் மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டு போவது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இறைவேண்டல் என்பது எவ்வளவு நேரம் வேண்டுகின்றோம் என்பது அல்ல, மாறாக, எப்படி வேண்டுகின்றோம் என்பதைப் பொறுத்தது.
நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக்கும்போது, இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுக்கவும், அதன்பிறகு நமது தேவைகளுக்காக மன்றாடவும் பணிக்கின்றார். இயேசு சொல்வது போல, இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்து, அவரது ஆட்சி இப்பூவுலகில் மலர நாம் மன்றாடினால் நிச்சயம் நமது தேவை எல்லாம் நிறைவேறும்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் இறைவேண்டலுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். எப்படி என்றால், அவர் வேண்டியதும் வானம் பொய்த்தது. மீண்டுமாக அவர் வேண்டியபோது மழை பெய்தது. இறைவாக்கினர் எலியா இறைவனிடம் திருவுளத்தை நிறைவேற்றியதாலேயே கடவுள் அவரது வேண்டுதலைக் கேட்டார். நாமும் கடவுளின் திருவுளம் நிறைவேற உழைப்போம். நிச்சயம் கடவுள் நமது வேண்டுதலைக் கேட்பார்.
சிந்தனைக்கு:
மனிதர்கள் வலுவற்றவர்கள்; அவர்கள் வலுப்பெற இறைவேண்டல் மிகவும் முக்கியமானது.
இறைவனின் ஆட்சி இப்புவியில் மலர்ந்து விட்டால், நமது தேவைகள் அனைத்தும் நிறைவேறும்
இறைமகன் இயேசுவுக்கே இறைவேண்டல் தேவைப்பட்டது எனில், நமக்கு அது இன்னும் மிகுதியாகவே தேவைப்படுகின்றது.
இறைவாக்கு:
‘நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கேற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார்’ (1யோவா 5:14) என்பார் யோவான். எனவே, நாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப மன்றாடி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.