இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 27:7-ல், “ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு நமது நீண்ட நாள் மன்றாட்டுகளுக்கு செவிமடுக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில் “வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
இறை வார்த்தையை நாம் எல்லாக் காலங்களிலும் பற்றிக் கொண்டு அதன் வழியில் நாம் நடந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
மனதில் அலகை விதைக்கும் தீய எண்ணங்களை நாம் முற்றிலும் அகற்றிட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.