வாசகமறையுரை (ஜூன் 03)

பாஸ்கா காலத்தின் ஏழாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 25: 13-21
II யோவான் 21: 15-19
“என் ஆடுகளை மேய்”
மறைக்கல்வியின் முன்னோடி:
ஞாயிறுதோறும் கோயில்களில் மறைக்கல்வி வகுப்பு நடைபெறுகின்றதல்லவா! இந்த மறைக்கல்வி வகுப்புக்கு முன்னோடியாகத் திகழ்பவர் சைரஸ் கோம்ஸ்டோக் (Cyrus Comstock).
ஒரு காலக்கட்டத்தில் ஆசிரியராக இருந்த இவர், ஆண்டவராகிய இயேசுவால் தொடப்பட்டு அருள்பணியாளர் ஆனார். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள பல இடங்களுக்குச் சென்று, கடவுளின் வார்த்தையை அறிவித்து, மக்களைக் கட்டி எழுப்பினார்.
திடீரென ஒருநாள் இவருக்கு, ‘பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது; கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு நாம் ஏன் திருமறையைப் பற்றிய கல்வியை – மறைக்கல்வியைக் – கற்றுக் கொடுக்கக்கூடாது?’ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து, கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு திருமறையைப் பற்றி எளிதில் புரியும் வகையில் ஒரு நூலை எழுதினார் இவர். அந்த நூலின் பெயர், “Feed my Sheep”. அதாவது ‘என் ஆடுகளை மேய்” என்பதாகும்.
ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்து, அதன்பின் அருள்பணியாளரான சைரஸ் கோம்ஸ்டோக் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியது கவனத்திற்குரியது. நற்செய்தியில் இயேசு பேதுருவிடம், “என் ஆடுகளை மேய்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
முன்பொரு முறை பேதுரு இயேசுவிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும், நான் ஒருபோதும் ஓடமாட்டேன்” (மத் 26:33) என்று சொல்லியிருப்பார். ஆனாலும், உயிருக்கு ஆபத்து வந்ததும், பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்திருப்பார். இதற்காக பேதுரு கண்ணீர் விட்டு அழுதாலும், அவர் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்கும் ஒரு சூழல் அமையவில்லை. இன்றைய நற்செய்தியில் இயேசு பேதுருவுக்கு அத்தகைய வாய்ப்பை அமைத்துத் தருகின்றார்; ஆனால் அதை மன்னிப்பு என்று சொல்வதை விடவும், பேதுரு தன்மீது எத்துணை அன்பு கொண்டிருக்கின்றார் என்பதை வெளிப்படுத்த இயேசு ஒரு சூழலை அமைத்துத் தருகின்றார் என்று சொல்லலாம்.
இயேசு பேதுருவிடம் என்மீது உனக்கு அன்பு உண்டா என்று மும்முறை கேட்பதை, மற்ற எல்லாரையும் விட, எல்லா எல்லாவற்றையும் விட; ஏன், உன் உயிரையும் விட உனக்கு என்மீது அன்பு உண்டா? என்ற விதத்தில் புரிந்துகொள்ளலாம். பேதுரும் இயேசுவிடம், எல்லாம் உனக்குத் தெரியுமே என்கிறார். அப்போதுதான் இயேசு அவரிடம் என் ஆடுகளை மேய் என்கிறார்.
“என் ஆடுகளை மேய்” என்று இயேசு பேதுருவிடம் சொன்னதை, அப்படியே செயல்படுத்தினார் பேதுரு. திருத்தூதர் பணிகள் நூலில் வரும் முதல் பன்னிரண்டு அதிகாரங்கள் அதற்குச் சான்றாக இருக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் பவுல் இயேசுவின் ஆடுகளை மேய்த்ததற்காக அல்லது அவரது வார்த்தையை மக்களுக்கு அறிவித்ததற்காக கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றார். இவையெல்லாம் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். அதுதான், கடவுளின் வார்த்தையை அறிவித்து, அவரது மந்தையை மேய்க்கும்போது துன்பங்களைத் தவிர்க்க முடியாது என்பதாகும்.
ஆகவே, நாம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை நல்லமுறையில் பேணிக் காப்போம். அதற்காக எதையும் இழக்கத் தயாராவோம்.
சிந்தனைக்கு:
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கடவுளின் வார்த்தையை அறிவிப்போம்.
இறைப்பணிக்கு முன்வருவோர் இடர்களையும் இன்னல்களையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
எல்லாரையும் விட, எல்லாவற்றையும் விட, நம் உயிரையும் விட இயேசுவை நாம் அன்பு செய்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருங்கள்’ (1 பேது 5:3) என்பார் புனித பேதுரு. எனவே, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மந்தைக்கு நாம் முன்மாதிரியாய் இருந்து, அவர்களைப் பேணிக் காத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.