பூமிக்கோளத்தின் அழுகுரல் இன்னும் செவிமடுக்கப்படவேண்டியுள்ளது

நம் பூமிக்கோளத்தைப் பாதித்துள்ள நோய்களைக் குணமாக்குவதற்கு, உடனடி, மற்றும், திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என, ஏழு ஆண்டுகளுக்குமுன்பே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி, Laudato si’ என்ற திருமடலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டபோது, அதில் அவர் மனிதர்களின் உடல்நோய்களைக் குணமாக்கும் மருத்துவர்களுக்கு அல்ல, நன்மனம்கொண்ட அனைத்து மனிதருக்குமே தன் விண்ணப்பத்தை முன்வைத்தார்.

Laudato si’ திருமடல், துவக்க உரை, ஆறு இயல்கள், இரு இறுதி இறைவேண்டல்கள் என, 221 பக்கங்களைக் கொண்டுள்ளது. திருஅவையின் சமூகக் கோட்பாடு பற்றி மட்டுமன்றி, உலகளாவியச் சமுதாயங்களின் அரசியல், பொருளாதார, மற்றும், சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் பற்றியும் இத்திருமடல் பேசியிருக்கின்றது. இத்திருமடல் வெளியிடப்பட்டதன் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அது குறித்து வத்திக்கான் ஊடகம், சிந்தனைகளை வழங்கியுள்ளது.

Laudato si’ திருமடல்

தன் அழுகுரல் இன்னும் செவிமடுக்கப்படாதநிலையில், அது பராமரிக்கப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என, பூமிக்கோளம் எதிர்கொள்ளும் சூழலியல் பிரச்சனை குறித்து அலசியுள்ள வத்திக்கான் ஊடகம், பூமிக்கோளம் ஒரு மனிதர் என்றால், அது தன்னைப் பாதித்துள்ள பல கடும் வலிகளிலிருந்து குணமடைவதற்கு, ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் கரங்களில், வலிகளைக் குறைக்கும் மோர்பின் மருந்து நேரடியாகச் செலுத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளது.

மாசுகேடு, காலநிலை மாற்றம், பல்லுயிரினங்கள் அழிவு, பொருளாதார சமத்துவமற்றதன்மையோடு தொடர்படைய உலகின் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையே உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் கடன், தொழில்நுட்ப ஆதிக்கம், சிறார் முறைகேடாகப் பயன்படுத்தப்படல், வயதுமுதிர்ந்தோர் கைவிடப்படல், மனித உறுப்பு வர்த்தம், வலுவற்றவர்களை அடிமைப்படுத்தல் போன்றவற்றிற்கு, கடந்த நாற்பது ஆண்டுகளில் மனிதரே முக்கிய காரணமாகியுள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மொத்தத்தில், பூமிக்கோளம் புற்றுநோயின் கடைசி கட்டத்தில் விடப்பட்டுள்ளது, இதைப் பாதித்துள்ள நோய்களும் நம் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ நேரடியாகப் பாதிக்காததால் அவை புறக்கணிப்பை எதிர்கொள்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

பூமிக்கோளம் எதிர்கொள்ளும் இந்நோய்களுக்கு மத்தியில், பெருந்தொற்று, மற்றும், போர் ஆகியவையும், அழிவையும் அச்சத்தையும் தொடர்ந்து விதைத்து வருகின்றன, அதேநேரம், பூமியைப் பாதுகாப்பதற்கு பல இடங்களில் நல்ல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

சில திட்டங்கள்

கானா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை, அரசின் ஆதரவோடு 2021ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் துவக்கியது. .கென்யாவின், ஒரே பருவமழைக் காடான Kakamegaவில் விதைகள் தூவும் நடவடிக்கை கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.

Comments are closed.