மே 25 : நற்செய்தி வாசகம்

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
“அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்”
பாஸ்கா காலத்தின் ஆறாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 17: 15, 22-18: 1
II யோவான் 16: 12-15
“அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்”
என் கையைப் பற்றிக்கொண்டு, என்னை வழிநடத்தும்:
1920 களில் ஜாஸ் இசை உலகில் முடிசூடா மன்னராக இருந்தவர் தாமஸ் ஆண்ட்ரூ தோர்சே (Thomas Andrew Dorsey). அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவைச் சேர்ந்த இவர் உலகப் போக்கிலான வாழ்ந்து, உலகப் போக்கிலான இசை அமைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 1926 ஆம் ஆண்டு ஆண்டவரால் இவர் தொடப்பட, கிறிஸ்தவராக வாழத் தொடங்கினார்.
இதற்குப் பிறகு இவர் உலகப் போக்கிலான இசை அமைப்பதை விட்டுவிட்டுக் கிறிஸ்துவப் பாடல்களை இயற்றி, அவற்றிற்கு அருமையான வரிகளை எழுதி வந்தார். ஆனால், இவருக்குத் தெரிந்தவர்களோ, இவர் இன்னும் உலகப் போக்கிலான இசையையே அமைத்துக் கொண்டிருக்கின்றார்; பக்திப் பாடல்கள் இவரது ஒத்து வரவில்லை என்று விமர்சனம் செய்தார்கள். இதனால் இவர் மிகவும் வருந்தினார்.
1932 ஆம் ஆண்டு இவருடைய வாழ்வில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்தது. இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக இவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது இவருக்கு ஒரு தந்தி வந்தது அதில் இவர் மிகவும் மிகவும் அன்பு செய்த, கர்ப்பிணியாய் இருந்த இவரது இறந்துவிட்டார் என்ற செய்தி இருந்தது. இச்செய்தியை வாசித்ததும் இவர் சுக்கு நூறாக உடைந்துபோனார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இவர் தான் தங்கியிருந்த அறைக்கு வந்து, ஒரு பேனாவையும் காகிதத்தையும் எடுத்து, “Pracious Lord, Take my hand, Lead me through the storm” என்று எழுதி, அதைப் பாடலாகவும் இயற்றினார். அது மிகவும் பிரபலமான ஒரு பாடலானது.
ஆம், மிகவும் துன்பம் நிறைந்த காலத்தில் தாமஸ் தோர்சே ஆண்டவர் தன்னை வழிநடத்துமாறு கேட்டார். ஆண்டவரும் அவரை நல்லமுறையில் வழி நடத்தி, அவரது இசையின் மூலம் பலரது உள்ளங்களை ஆண்டவர் தொட்டார். இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடரிடம், “தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தூய ஆவியாரைப் பற்றித் தொடர்ந்து பேசிவரும் இயேசு, இன்றைய நற்செய்தியில், “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியர் வரும்பொது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை நடத்துவார்” என்கிறார். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம் தூய ஆவியாரே உண்மை என்பதால்தான் (1 யோவா 5:6).
இன்றைய முதல் வாசகம் இயேசுவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது. ஏதென்ஸ் நகர் செல்லும் பவுல், அங்கிருந்த அரேயோப்பாகு மன்றத்தில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிக் கற்பிக்கின்றார். அதைவிடவும் அவர்களுடைய தொழுகையிடங்களில் அறியாத தெய்வத்திற்கென்று பலிபீடம் ஒன்று இருந்ததாகவும், அந்த தெய்வம் உலகையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்த இயேசு கிறிஸ்துதான் என்கிறார். பவுல் அறிவித்த இந்த நற்செய்தியைக் கேட்ட மக்களில் பலர் அவரைக் கேலி செய்தாலும், ஒருசிலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கின்றார். இத்தகையதொரு செயலுக்குத் தூய ஆவியார்தான் காரணமாக இருந்திருப்பார் என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஆம், தூய ஆவியார் தெய்வங்களை வழிபட்டு வந்த கிரேக்கர்களை உண்மையாம் இயேசுவை நோக்கி வழிநடத்திச் சென்றார். இன்றும் அவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தக் காத்திருக்கின்றார். எனவே, நாம் அவரால் வழிநடத்தப்பட்டு, மற்றவரையும் நல்லமுறையில் வழிநடத்துவோம்.
சிந்தனைக்கு:
 தவறான வழியில் நம்மை வழிநடத்தப் பலர் உண்டு. தூய ஆவியாரால் மட்டுமே நம்மை உண்மையை நோக்கி வழிநடத்த முடியும்.
 அறியாமையிலிருந்து அறிவுக்குக் கடந்து வருவதே உண்மையான ஞானம்.
 தூய ஆவியாரை நோக்கி, நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்தக் கேட்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்’ (எசா 58:11) என்கிறது இறைவார்த்தை. எனவே, ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து வழி நடத்தக் கேட்டு, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.