கல்லான இதயங்களின் மனமாற்றத்திற்கு திருத்தந்தை அழைப்பு

கடின இதயங்கள் கனிவுள்ள இதயங்களாக மாறுவதற்கு, அவற்றில் ஓர் ஆழமான மாற்றம் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 20, இவ்வெள்ளியன்று அமைதி (#Peace), அனைவரும் உடன்பிறந்தோர் (#FratelliTutti) என்ற ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

“மற்றவரை, தன் சகோதரர் அல்லது சகோதரியாக, அனைவரும் அங்கீகரிப்பதற்கு, கடின இதயங்களை இளகச்செய்யும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

Laudato Sì வாரம், மே 22-29

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato Sì திருமடல் வெளியிடப்பட்டதன் ஏழாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, மே 23 வருகிற திங்கள் முதல் 20 ஞாயிறு வரை, ஏழு நாள்கள், உலக அளவில் நூற்றுக்கணக்கான பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளத்தைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவுமென இடம்பெறும் இந்த ஒரு வார நடவடிக்கைகளில், உலக அளவில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் இணைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பூமியின் அழுகுரலுக்குச் செவிமடுத்தல், பல்லுயிர்களை அழிவிலிருந்து காப்பாற்றுதல்,  சூழலியல் பொருளாதாரம், சரியான வாழ்க்கைமுறையை ஏற்றல், Laudato si’ல் மூலதனம், சூழலியல் கல்வி, சூழலியல் ஆன்மீகம், திருஅவையில் ஒருங்கிணைந்த பயணம் போன்ற தலைப்புக்களில் இந்நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.