வாசக மறையுரை (மே 20)

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 15: 22-31
II யோவான் 15: 12-17
“நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்”
கடவுளால் அழைக்கப்பட்ட கல்லூரி மாணவன்:
அந்த மாணவனுக்குக் கணிதம் என்றால் உயிர். அதனால் அவன் அதை மிகுந்த ஆர்வத்தோடு படித்தான். ஒரு கட்டத்தில் அவனுக்குக் கணிதத்தில் எல்லாமே அத்துப்படி ஆனது. கல்லூரில் அவன் படித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் கணிதத்தில் அவனுக்கு இருந்த திறமையைப் பார்த்துவிட்டு, கல்லூரி நிர்வாகம் அவனுக்கு மிகப்பெரிய விருதினை வழங்கியது. அப்போது அவனுக்கு வயது 20 தான்.
இதன்பிறகு வந்த நாள்களில் அவன் தன்னுடைய வாழ்வில் வெறுமையை உணர்ந்தான். அப்போதுதான் அவன், கடவுளின் அழைப்பையும் உணர்ந்தான். எனவே, அவன் தன்னுடைய 24 வது வயதில் இந்தியாவிற்குப் புறப்பட்டு வந்து, இங்கு ஏழு ஆண்டுகள் மிகக் கடுமையாகப் பணியாற்றித் தனது 31 வது வயதில் இறைவனடி சேர்ந்தான்.
இந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் அவன் ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளச் செய்தான். அதைவிடவும் அவன் மூன்று இந்திய மொழிகளில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்தான். இப்படி மிகக்குறைந்த வயதிலேயே மறைப்பரப்புப் பணியில் மிகப்பெரிய சாதனைகள் செய்தவர்தான் ஹென்றி மார்ட்டின் என்ற மறைப்பணியாளர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது பணியை மிக ஆர்வத்தோடு செய்தது நம்மை வியக்க வைக்கின்றது.
நற்செய்தியில் இயேசு, “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இன்றைக்கு வேண்டுமானால் ஒருவருடைய பின்னணியைக் கருத்தில்கொண்டு அவர் கடவுளுடைய பணிக்குத் தேர்ந்துகொள்ளப்படலாம். ஆனால், கடவுள் ஒருவரைத் தன்னுடைய பணிக்கென அழைக்கும்போது அவரது ‘பின்னணி’யைப் பார்ப்பதில்லை. மாறாக, அவர் எல்லாரையும் அழைக்கின்றார். அதற்குத் திருவிவிலியத்தில் சான்றுகள் உள்ளன (இச 7:7).
நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்” என்கிறார். இவ்வாறு இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்ட சீடர்கள் மிகுந்த கனிதருமாறு அழைக்கப்படுகின்றார்கள். கடவுளின் அழைப்பு முழுக்க முழுக்க அவரது அருளினால்தான் என்பதால், அவரால் அழைக்கப்பட்டவர்கள் மிகுந்த கனிதர வேண்டும் என்பதுதான் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் தரத் துணிந்த யூதாவும் சீலாவும் திருத்தூதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் பவுலோடு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். யூதாவைப் பற்றிச் சரியான குறிப்புகள் இல்லை; ஆனால், சீலா பவுலின் இரண்டாவது திருத்தூதுப் பயணத்தில் அவரோடு உடன் பயணித்தவர். இவ்வாறு அவர்கள் இருவரும் மிகுந்த கனிதந்தார்கள். கடவுளால் நாமும் அவரது பணிசெய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றோம். அதனால் நாமும் மிகுந்த கனிதந்து, அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
 கடவுளிடமிருந்து அழைப்பைப் பெற ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
 கடவுளின் அழைப்பு என்பது நாம் பிழைப்பதற்காக அல்ல, மற்றவர்களைப் பிழைக்க வைக்க
 கடவுளின் அழைப்பைத் தடுப்பதற்கு யாருக்கும் எந்த உரிமையுமில்லை.

Comments are closed.