மே 18 : நற்செய்தி வாசகம்

ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
இயேசுவோடு ஒன்றித்திருப்போம்
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 15: 1-6
II யோவான் 15: 1-8
இயேசுவோடு ஒன்றித்திருப்போம்
இயேசுவோடு ஒன்றித்திராவிட்டால்:
நண்பர்கள் இருவர் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர். அங்கே சென்றதும், தங்கள் கண்முன்பாக ஆர்ப்பரித்து ஓடிய அந்த நீர்வீழ்ச்சியை அதன் ஓரத்திலிருந்து பார்த்து, மெய்ம்மறந்து போனார்கள். தொடர்ந்து அவர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர்களை அறியாமல் உள்ளே விழுந்தார்கள்.
“காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அவர்கள் கத்தியதும், அங்கிருந்தவர்கள் ஒரு பெரிய கயிறை எடுத்து வந்து, அதை உள்ளே வீசினார்கள். அதை ஒருவர் நன்றாகப் பிடித்துக் கொண்டார். இன்னொருவர் அதைப் பிடிப்பதற்குள், பெரிய மரக்கட்டை ஒன்று அவருக்கு முன்பாக மிதந்து வந்தது. ‘இந்த மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டால், எப்படியும் கரை சேர்ந்துவிடலாம்’ என நினைத்துக்கொண்டு அவர் அதைப் பற்றிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் கயிற்றைப் பிடித்திருந்தவரை மேலே இருந்தவர்கள் பிடித்து இழுத்துக் காப்பாற்றினார்கள். மரக்கட்டையை பிடித்திருந்தவரோ நீர்வரத்து மிகுதியானதால், அதில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் கயிற்றைப் பிடித்திருந்த மனிதர் மேலே இருந்தவர்களோடு ஒன்றித்திருந்ததால் – இணைந்திருந்தால் – காப்பாற்றப்பட்டார். மரக்கட்டையைப் பிடித்திருந்தவர் யாருடனும் ஒன்றித்திருக்கவில்லை. அதனால் அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனார். நாம் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்போது மிகுந்த கனிதருவோம். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நானே விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு, உலகின் ஒளி, வழி, உண்மை, வாழ்வு, என்று சொன்ன இயேசு, இன்றைய நற்செய்தியில், “உண்மையான திராட்சை கொடி நானே” என்கிறார். திருவிவிலியத்தில் ‘திராட்சைக் கொடி’ என்ற சொல்லானது இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது (திபா 80: 9-16; எசா 5:1-7). இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அவருக்கு உண்மையாய் இல்லை. ஆனால், இயேசு கிறிஸ்து கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவருக்கு உண்மையாய் இருந்தார். இதனால்தான் அவரால், “உண்மையான திராட்சைக் கொடி நானே” என்று துணிந்து சொல்ல முடிந்தது.
இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் ஒன்றித்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.” இயேசுவோடு ஒன்றித்திருப்பது என்பது அவரது கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வது (யோவா 14:21) இவ்வாறு அவரோடு ஒன்றித்திருக்கும் ஒருவர் மிகுந்த கனிதருவார். அதே நேரத்தில் அவரது கட்டளையைக் கடைப்பிடியாமல், அவரோடு ஒன்றித்திராதவரால் கனிதரவே முடியாது. அதனால் அவர் தறித்து எறியப்படுவார்.
முதல் வாசகத்தில், விருத்தசேதனம் செய்யாவிட்டால் மீட்புப் பெறமுடியாது என்ற செய்தியைச் சிலர் மக்கள் நடுவில் பரப்பி வைத்தனர். இதனைப் பவுலும் பர்னபாவும் எருசலேமில் இருந்த திருத்தூதர்களிடம் கொண்டுசென்று, விவாதிக்கும்போது மீட்புப் பெற விருத்த சேதனம் செய்யத் தேவையில்லை, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அவரோடு ஒன்றித்து வாழ்ந்தால் போதுமானது என்ற நல்லதொரு முடிவானது எடுக்கப்படுகின்றது.
ஆம், நாம் மிகுந்த கனிதரவும் மீட்புப் பெறவும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவரோடு ஒன்றித்து வாழ்வது மிகவும் அவசியம். இதனை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

Comments are closed.