வாசக மறையுரை (மே 14)

பாஸ்கா காலத்தின் நான்காம் வாரம் சனிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 13: 44-52
II யோவான் 14: 7-14
“நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் செய்வேன்”
ஆபத்திலிருந்து காப்பாற்றிய இயேசுவின் திருப்பெயர்:
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் ஒருத்தி தனது வேலையை முடித்துக்கொண்டு, கோயிலில் மாலைத் திருப்பலியில் பங்கேற்பதற்காக மின்தூக்கி (Elavator) வழியாக வேகமாகக் கீழே இறங்கி வந்தாள். அவள் எட்டாவது தளத்திலிருந்து தனியாக வந்துகொண்டிருந்தபோது, ஏழாவது தளத்தில் ஒருவர் மின்தூக்கியில் ஏறினார்.
மின்தூக்கியில் ஏறியவர் அவள் தனியாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது அவளுடைய உள்ளத்தில் வேறு எந்தச் சிந்தனையும் தோன்றவில்லை; இயேசுவின் திருப்பெயர்தான் தோன்றியது. உடனே அவள் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி வேண்டத் தொடங்கினாள். இதனால் அவளிடம் தவறாக நடக்க முயன்ற அந்த மனிதர் எதுவுமே செய்யாமல் அப்படியே அடங்கிப் போனார். தொடர்ந்து வந்த தளங்களில் மின்தூக்கியில் யாருமே ஏறவில்லை என்றாலும், அந்த மனிதர் மிகவும் சாதாரணமாக இருந்தார்.
தன்னுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது என்ற மகிழ்ச்சியில் கோயிலுக்கு வந்து சேர்ந்ததும், அவள் ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி சொன்னாள்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் இளம்பெண்ணை ஆபத்திலிருந்து ஆண்டவர் இயேசுவின் திருப்பெயர் காப்பாற்றியது. இன்றைய நற்செய்தியில் இயேசு, “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தன்னுடைய சீடர்களை விட்டுப் பிரியவேண்டிய நேரம் வந்ததும், அவர்கள் உள்ளம் கலங்கினார்கள் (யோவா 14:1). அப்போது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், இயேசு பேசும் வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கின்றார்” என்று சொல்லிவிட்டு, “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” என்கிறார்.
இப்பொழுது, இயேசுவின் பெயரால் நாம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குத் தருவாரா? என்ற கேள்வி எழலாம். இயேசுவின் பெயரால் நாம் கேட்பதையெல்லாம் அவர் நமக்குத் தரப்போவதில்லை. மாறாக, நாம் இறைவனின் திருவுளத்திற்காக, அவரது பணிக்காகக் கேட்டோம் என்றால், நிச்சயம் அவர் நமக்குத் தருவார்.
இன்றைய முதல்வாசகத்தில் பவுலும் பர்னபாவும் யூதர்களிடம் கடவுளின் வார்த்தையை அறிவிக்கும்போது, அவர்கள் அதைப் புறக்கணிக்கின்றார்கள். இதனால் அவர்கள் பிறவினத்தாரிடம் கடவுளின் வார்த்தையை அறிக்கின்றார்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றார்கள். பணிவாழ்வில் பவுலும் பர்னபாவும் நிறைய இன்னல்களைச் சந்தித்தார்கள். அவர்களைப் போன்று நாம் கடவுளின் பணியைச் செய்யும்போது, அதன்பொருட்டு நாம் இன்னல்களைச் சந்திக்கும்போது, இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி மன்றாடினால், அவர் நமது வேண்டுதலைக் கேட்பார்.
எனவே, நாம் இயேசுவின் திருப்பெயரை நம்பிக்கையோடும், அதே நேரத்தில் அவரது பணிக்காகவும் பயன்படுத்தி, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 ஆண்டவர் தம் அடியார்களைக் கைவிடுவதுமில்லை; கைநெகிழ்வதுமில்லை.
 ஆண்டவரின் திருப்பெயரே நமக்கு ஆற்றல்!
 கடவுள் நமது வேண்டுதலைக் கேட்காதபோது, அதைத் திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.

Comments are closed.