மே 4 : நற்செய்தி வாசகம்

மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.
அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
“கடவுள்தானே அனைவருக்கும் கற்றுத்தருவார்”
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 8: 26-40
II யோவான் 6: 44-51
“கடவுள்தானே அனைவருக்கும் கற்றுத்தருவார்”
கற்றுத்தந்த அருள்பணியாளர்:
ஞாயிறு திருப்பலி முடிந்ததும், புனிதா பங்குப் பணியாளரைப் பார்க்கச் சென்றாள். புனிதாவிற்கு நிச்சயதார்த்தம் (மண ஒப்பந்தம்) நடந்து முடிந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
பங்குப்பணியாளரைப் பார்த்ததும் அவள், “சுவாமி! என் பெற்றோர் ஏற்பாடு செய்திருக்கின்ற திருமணத்தில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. அதை எப்படியாவது நிறுத்தி விடுங்கள்” என்று வருத்தத்தோடு சொன்னாள். “ஏன் புனிதா! பையனை உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று பங்குப் பணியாளர் அவளிடம் அதிர்ச்சியோடு கேட்டபோது, அவள், “ஆமாம். பையனுக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாது. அப்படிப்பட்டவனை நான் கட்டிக்கொண்டால் என் வாழ்க்கை நரகமாகிவிடும்” என்றாள்.
“கவலைப்படாதே புனிதா! அவனுக்கு எல்லாவற்றையும் நான் கற்றுத்தந்து, கடவுள்மீது நம்பிக்கை ஏற்படச் செய்கின்றேன்” என்று உறுதியளித்தார். இதன்பிறகுதான் புனித மகிழ்ச்சியோடு வீடு திரும்பினாள்.
ஆம், கற்றுத் தருதல் மிகவும் இன்றியமையாதது. அப்போதுதான் அறியாமை விலகும். இன்றைய இறைவார்த்தை, “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்” என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் நடுவில், “கடவுள் கற்றுத் தருவார்” (எசா 54:13) என்ற எண்ணம் இருந்தது. இந்நிலையில், “வாழ்வு தரும் உணவு நானே” என்று மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்த இயேசு, மேலே உள்ள வார்த்தைகளைத் தனது போதனையில் எடுத்தாளுகின்றார். இதன்மூலம் இயேசு, மக்களும், அவரது சீடர்களும் எந்தவோர் ஐயமின்றி வாழ்வு தரும் உணவான தன்மீது நம்பிக்கை கொள்ள அழைக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் எத்தியோப்பிய நீதியமைச்சர், தான் வாசித்துக் கொண்டிருந்த எசாயாவின் இறைவாக்கு நூலின் பொருள் புரியாமல் இருந்தபோது தூய ஆவியார் திருத்தொண்டர் பிலிப்பை அவரிடம் அனுப்பி, அவருக்குக் கற்றுத் தரச் சொல்கின்றார். பிலிப்பு எத்தியோப்பிய நிதியமைச்சருக்குக் கற்றுத் தந்ததும், அவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுகின்றார். இதன்மூலம் கடவுளின் வார்த்தையை மக்களுக்குக் கற்றுத்தருவதால், எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
எனவே, நாம் கடவுளின் வார்த்தையை மக்களுக்குக் கற்றுத் தருவோம். அதற்கு முன்னதாக, நாம் கடவுளின் வார்த்தையைப் பிழையறக் கற்போம்.
சிந்தனைக்கு:
 கடவுளின் வார்த்தையை மக்களுக்குக் கற்றுத்தருவதன் மூலமே உலகில் உள்ள அறியாமை விலகும்
 பெயருக்குக் கற்றுத் தருபவர் ஆசிரியர் அல்லர். கடமை உணர்வோடு கற்றுத் தருபவரே ஆசிரியர்.
 இறைவார்த்தை வாழ்வளிக்கக்கூடியது. அதை நாம் மற்றவர்களுக்கு எந்தவோர் எதிர்பார்ப்பும் இன்றி எடுத்துச் சொல்வோம்.
இறைவாக்கு:
‘இறையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிப்பவரோ விண்ணரசில் பெரியவர்’ (மத் 5:19) என்பார் இயேசு. எனவே, நாம் இறைவார்த்தையைக் கடைப்பிடித்துக் கற்பித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.