வாசக மறையுரை (மே 04)
பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 8: 1b-8
II யோவான் 6: 35-40
மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்
நற்செய்திப் பணியாளர்கள் ஆவோம்:
ஒரு பங்கில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த நற்செய்திக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குச் சிறப்பு விருந்தினராகப் பங்குப் பணியாளர் அழைக்கப்பட்டிருந்தார்.
கூட்டம் தொடங்கி, நற்செய்திக் குழுவின் செயலர் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். ஆண்டறிக்கையில் இப்படியொரு சொற்றொடர் இடம்பெற்றிருந்தது. “நமது பங்கில் மொத்தம் ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இதில் இருநூறு குடும்பங்களில் திருவிவிலியமே இல்லை. அதனால் அந்த இருநூறு குடும்பங்களுக்கும் திருவிவிலியம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.”
செயலர் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து முடித்ததும், பங்குப் பணியாளர் பேச எழுந்தார். “ஆண்டறிக்கையில் இருநூறு குடும்பங்களில் திருவிவிலியம் இல்லை என்று சொன்னீர்களே! அந்த இருநூறு குடும்பங்களுக்கும் திருவிவிலியத்தை நீங்கள் எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பங்குப் பணியாளர். அதற்குச் செயலர், “தலைவர்தான் ஒவ்வொரு வீடாகச் சென்று திருவிவிலியத்தை வழங்குவார்” என்றார்.
உடனே பங்குப் பணியாளர் அரங்கில் இருந்த எல்லாரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, இந்த அரங்கில் எப்படியும் இருநூறு பேராவது இருப்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு திருவிவிலியத்தை எடுத்துக்கொண்டு, அதை ஒரு வீட்டிற்குக் கொடுங்கள். அவ்வாறு கொடுக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவியுங்கள். இதன்மூலம் திருவிவிலியத்தைக் கொடுத்தது மாதிரியும் இருக்கும். நற்செய்தியை அறிவித்த மாதிரியும் இருக்கும்” என்றார். பங்குப் பணியாளர் சொன்ன யோசனை எல்லாருக்கும் பிடித்துப் போக, அவர்கள் அதைச் செயல் படுத்தினார்கள்.
ஆம், நாம் ஓவ்வொருவரும் நற்செய்திப் பணியாளராய் இருக்க வேண்டும். அதையே இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. இன்று நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வார்த்தையை மக்களுக்கு அறிவித்து, அவர்களைக் கடவுளின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்யவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
திருத்தொண்டரான ஸ்தேவான் கொல்லப்பட்ட பின்பு, திருத்தூதர்களைத் தவிர்த்து, மக்கள் அனைவரும் யூதேயா, சமாரியா ஆகிய இடங்களுக்குச் சிதறுண்டு போனார்கள். இவ்வாறு சிதறுண்டு போனவர்கள் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.
தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்று சொல்வார்களே! அந்த மாதிரி தொடக்கக் காலத் திருஅவை இன்னலுக்கு உள்ளானபோதும், அதனால் சிதறுண்டு போன மக்கள் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். அவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகின்றவர் திருத்தொண்டர் பிலிப்பு. இவர் அறிவித்த நற்செய்திக்கு மக்கள் செவிசாய்த்தனர். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டனர்.
நற்செய்தியில் இயேசு, “வாழ்வு தரும் உணவு நானே!” என்று சொல்லிவிட்டு, “மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம்” என்கிறார். எல்லாரும் நிலைவாழ்வு பெறவேண்டும் (1 திமொ 2:4). இத்தகைய கடவுளின் திருவுளம் நிறைவேற வேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைத் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் போன்று மக்களுக்கு அறிவித்து, அவர்களை இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும். ஏனெனில், அறிவிக்கப்படுவதைக் கேட்டால்தான் மக்களுக்கு இயேசுவின்மீது நம்பிக்கை ஏற்படும் (உரோ 10:17).
எனவே, நாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொள்வோம். அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கு அறிவித்து, அவர்களும் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்வோம்.
சிந்தனைக்கு:
நற்செய்தி என்பது நாம் பெறக்கூடிய மிக உன்னதமான செல்வம். அதை நாம் மட்டும் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கும் கொடுக்க வேண்டும்.
வாழ்வு தரும் உணவை உட்கொள்ளும் நாம், உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவிட வேண்டும்.
நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற புரிதல் நமக்கு வேண்டும்
Comments are closed.