வாசக மறையுரை மே 03

பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 7: 51- 8: 1a
II யோவான் 6: 30-35
“வாழ்வு தரும் உணவு நானே”
வாழ்வு தந்த ‘உணவு’:
முன்பொரு காலத்தில் ஐரோப்பாக் கண்டத்திலிருந்து இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்க வந்த மறைப்பணியாளர் ஒருவர், யோவான் நற்செய்தி நூலை மட்டும் பிரசுரித்து, அதை மக்களுக்கு வழங்கி வந்தார். இந்நூல் கிறிஸ்தவத்தின்மீது மிகுந்த வெறுப்போடு இருந்த ஒருவருடைய கையில் கிடைத்தது. அவர் அந்நூலை நன்றாகக் கிழித்துப் பாதையில் விட்டெறிந்துவிட்டுப் போனார்.
சிறிது நேரம் கழித்து அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். அதில் ஓர் இளைஞருடைய காலடியில், கிழித்து விட்டெறியப் பட்ட யோவான் நற்செய்தி நூலிலிருந்த துண்டுக் காகிதம் ஒன்று விழுந்தது. அவர் அதை எடுத்துப் படித்துப் பார்த்தபோது, “வாழ்வு தரும் உணவு” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
“ ‘வாழ்வு தரும் உணவு’ – புதுமையான வார்த்தையாக இருக்கின்றதே! இது எந்த நூலில் இடம்பெறும் வார்த்தைகள் என்று தெரியவில்லையே!?” என்று அந்த இளைஞர் தன் நண்பரிடம் கேட்டபோது, அவர், “கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் இடம்பெறும் வார்த்தைகள் இவை. இந்த நூலை நீ படித்தால் தீட்டானவனாவாய்” என்றார்.
“இவ்வளவு அற்புதமான வார்த்தைகளைக் கொண்டிருக்கும் திருவிவிலியத்தை நான் படித்தால் தீட்டானவன் ஆகமாட்டேன்; புனிதனாவேன்” என்று சொல்லிவிட்டு அந்த இளைஞர், புதிய ஏற்பாட்டை வாங்கி வாசிக்கத் தொடங்கினார். ‘வாழ்வு தரும் உணவு நானே’ என்று இயேசு தன்னைப் பற்றித்தான் சொல்கிறார் என்பதை வாசித்து அறிந்த அந்த இளைஞர், ‘இயேசு வாழ்வு தரும் உணவு எனில், அவருக்காக நான் ஏன் என்னுடைய வாழ்வை அர்ப்பணிக்கக் கூடாது’ என்று அவர் ஒரு நற்செய்திப்பணியாளராகி, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.
ஆம், வாழ்வு தரும் உணவாம் இயேசு, அந்த இளைஞருக்கு வாழ்வளித்தார். இன்றைய நற்செய்தியில் இயேசு, வாழ்வு தரும் உணவு நானே என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்திருந்தார். அது யூதர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அதனால் அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?” என்று கேட்கிறார்கள்.
யூதர்கள் எதிர்பார்த்தது, மோசேயைப் போன்று இயேசு இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் மன்னா வழங்கவேண்டும் என்பது. இதில் என்ன நகைமுரண் என்றால், இயேசுதான் – கடவுள்தான் – பாலைநிலத்தில் மக்களுக்கு உணவளித்தார் என்பது கூடத் தெரியாதது. மன்னாவை உண்டவர்கள் இறந்தார்கள்; ஆனால், இயேசுவை உண்பவர்கள் இறப்பதில்லை. எனவே தான் இயேசு, “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் வாழ்வு தரும் உணவாம் இயேசுவை உட்கொண்ட – அவர்மீது நம்பிக்கை கொண்ட – ஸ்தேவான் இயேசுவுக்காகத் தனது உயிரைத் தந்து நிலைவாழ்வைப் பெறுகின்றார். இயேசுவுக்காக உயிரைத் துறப்பதும், நிலைவாழ்வைப் பெறுவதும் மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினைப் பெற நாம் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்போம்.
சிந்தனைக்கு:
 அறியாமை அழிவைத் தரும்
 இயேசு அளிக்கும் வாழ்வினைப் பெற ஒருவர் அவர்மீது நம்பிக்கை வைத்து வாழவேண்டும்.
 இயேசுவுக்காக உயிரைத் துறப்பது வாழ்வைப் பெறுவதற்கு இணையானது.
இறைவாக்கு:
‘ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்’ (எசா 40: 31) என்பார் இறைவாக்கினர் எசாயா. எனவே, நாம் ஆண்டவராம் இயேசுவில் நம்பிக்கை வைத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.