ஒருமைப்பாடு வழியாக அமைதியைக் கட்டியெழுப்புங்கள்

ஒவ்வொரு நாள் வாழ்விலும், பிறரன்பு, மற்றும், வரவேற்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்தி, அமைதியைக் கட்டியெழுப்புங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 30, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த சுலோவாக்கியா நாட்டின் 2,500 திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.

2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்திற்கு நன்றிகூரும் நோக்கத்தில், உரோம் மாநகருக்குத் திருப்பயணமாக வந்துள்ள அந்நாட்டுத் திருப்பயணிகளுக்கு உரையாற்றியபோது, அம்மக்கள் உக்ரைன் நாட்டு புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

குடும்பப் பிணைப்புகளை உடைத்து, சிறார் தங்கள் தந்தையரின் பிரசன்னம் மற்றும், கல்வியை இழக்கச்செய்து, தாத்தாக்கள் பாட்டிகள் தனியே புறக்கணிக்கப்படும் நிலையை போர் எவ்வாறு உருவாக்கியுள்ளது என்பதற்கு, சுலோவாக்கியர்கள் சாட்சிகளாக உள்ளதை திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தனது சுலோவாக்கியா நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் சந்தித்த அனைவரையும் மறக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, இந்நிகழ்வில் வயதுமுதிர்ந்த கர்தினால் யோசேப் தொம்கோ அவர்கள் உட்பட சுலோவாக்கியா நாட்டின் பாராளுமன்றத் தலைவர், அரசியலமைப்பு நீதிமன்றத் தலைவர் உட்பட பல அரசு அதிகாரிகள் கலந்துகொள்வதற்கும், அந்நாட்டு அரசுத்தலைவர் தனக்கு சிறப்பு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பதற்கும் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.