தொழிலாளர் புனித யோசேப்பு (மே 01)

தொழிலாளர் புனித யோசேப்பு (மே 01)
புனித யோசேப்பின் வியர்வைத் துளி:
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், “உங்களுக்குப் பிடித்தமான புனிதரிடமிருந்து பிடித்தமான ஒன்றை வரையுங்கள்” என்றார்.
உடனே மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான புனிதரிடமிருந்து, பிடித்தமான ஒன்றை வரையத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொன்றை வரைய, ஒரு மாணவன் மட்டும் வியர்வைத் துளியை வரைந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்து ஆசிரியர், “இது என்ன? இது யாருடையது?” எனக் கேட்டார். அதற்கு அந்த மாணவன், “இது வியர்வைத்துளி… அதுவும் புனித யோசேப்பின் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளி” என்றான்.
ஆசிரியர் தொடர்ந்து அவனிடம், “நீ புனித யோசேப்பின் வியர்வைத் துளியை வரையக் காரணம் என்ன?” என்று கேட்க, அவன் அவரிடம், “புனித யோசேப்பின் நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத் துளியில் கடின உழைப்பு தெரிகிறது… இயேசுவுக்காகவும் மரியாவுக்காகவும் செய்த தியாகம் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் விருப்பம் நிறைவேறத் தன்னையே கையளித்த அவரது அர்ப்பணம் தெரிகிறது” என்றான்.
ஆம், இன்று நாம் நெற்றி வியர்வை சிந்த உழைத்த தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பின் விழாவை கொண்டாடுகிறோம். 1955 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இவ்விழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்று சிந்தித்துப் பார்ப்போம்.
அ. கடவுளில் மீட்புப் பணியில் பங்கெடுத்த புனித யோசேப்பு:
ஆண்டவராகிய கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தையும் ஆறு நாள்களில் படைத்து விட்டு, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார் என்று திருவிவிலியத்தில் நாம் படிக்கின்றோம் (தொநூ 2:2). இதன் மூலம் கடவுள் ஓர் உழைப்பாளி அல்லது தொழிலாளி என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் இயேசு கூறுகின்ற, “என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்” (யோவா 5: 17) என்ற வார்த்தைகள் கடவுள் ஓய்ந்திருக்கவில்லை, அவர் இன்றும் செயலாற்றுகிறார் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.
அதுபோல், “ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்குக் கொண்டுவந்து குடியிருக்க செய்தார்” (தொநூ 2: 15) என்ற வார்த்தைகள், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கக்கூடிய இந்த உலகை நமது உழைப்பினால் பண்படுத்த வேண்டும் என்று செய்தியானது சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் புனித யோசேப்பு தன்னுடைய கடின உழைப்பினால் உலகைப் பண்படுத்தினார். மட்டுமல்லாமல் கடவுளின் மீட்புப் பணியில் பங்கேற்றார் என்று சொல்லலாம்.
ஆ. உழைப்பை இழிவாகக் கருத புனித யோசேப்பு:
இன்று ஒருசிலர் ஒரு சில வேலைகளை இழிவாக கருதும் மனநிலையானது தொடர்ந்துகொண்டிருக்கிறது. ‘இவையெல்லாம் இன்னார் செய்யக்கூடிய வேலைகள்…’, அவையெல்லாம் அவர்கள் செய்யக்கூடிய வேலைகள்…’ என்று ஒருவர் செய்யக்கூடிய வேலையை வைத்து அவரை இழிவாக பார்க்கக்கூடிய நிலை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் புனித யோசேப்பு தான் செய்துவந்த தச்சுத்தொழிலை ஒருபோதும் இழிவாக நினைத்ததில்லை என்றே சொல்லலாம். ஒருவேளை அவர் மட்டும் தான் செய்து வந்த தச்சுத் தொழிலை இழிவாகக் கருதியிருந்தால் அந்த வேலையை அவர் செய்திருக்கவே மாட்டார். மாறாக, அவர் அந்த வேலையை உயர்வாகக் கருதினார். எனவே நாம் ஒருவர் செய்யக்கூடிய வேலையைக் கொண்டு அவரை இழிவாகக் கருதுகின்ற போக்கினை நம்மிடத்திலிருந்து களையவேண்டும்.
இ. உழைப்பால் திருக்குடும்பத்திற்கு உயிர்கொடுத்த புனித யோசேப்பு:
இயேசு, மரியா, யோசேப்பு ஆகியோரை உள்ளடக்கிய திருக்குடும்பத்திற்கு புனித யோசேப்பு தன்னுடைய கடின உழைப்பால் உயிர் கொடுத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
ஏனென்றால் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த யூத சமூகத்தில் மரியா வெளியே சென்று வேலை செய்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது; இயேசுவும் எங்கேயும் சென்று வேலை செய்ததாக திருவிவிலியத்தில் குறிப்பு இல்லை. ஆகையால் புனித யோசேப்பின் உழைப்பால் மட்டுமே திருக்குடும்பம் பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்றிருக்கும் என்று சொல்லலாம். இவ்வாறு யோசேப்பு தன்னுடைய கடின உழைப்பால் குடும்பத்திற்கு உயிர் கொடுத்தார்.
நாமும் கூட கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் இந்த உடலை கொண்டு இவ்வுலகிற்கும், கடவுளின் திருஅவைக்கும் உயிர் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
நாம் நம்முடைய கடின உழைப்பால் உலகிற்கும் கடவுளின் திருஅவைக்கும் உயிர் கொடுக்க முன்வருகிறோமா? சிந்திப்போம்.

Comments are closed.