ஏராளமானோர் இன்னும் அடிமைமுறையில் சிக்குண்டுள்ளனர்

நாம் வாழ்கின்ற இக்காலம், அடிமைமுறையை ஒழித்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கின்றது, ஆனால், உண்மையில், ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறாரும்கூட, அடிமைப்படுத்தப்பட்டு, மனிதமற்ற நிலையில் வாழும் நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தூய மூவொரு கடவுள் துறவு சபை, உலகளாவிய டிரினிட்டேரியன் ஒருமைப்பாடு என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்தில் பங்குபெற்ற 120 பிரதிநிதிகளை, ஏப்ரல் 25, இத்திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இச்சபையினர், சமய அடக்குமுறைக்கு எதிராக ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக, அடிமைமுறை, அடக்குமுறை, புறக்கணிப்பு, சித்ரவதை போன்றவற்றுக்குப் பலியாகுவோருடன் இத்துறவு சபையினர் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு ஆற்றிவரும் பணிகளையும் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார். இத்துறவு சபையை ஆரம்பித்த புனித John de Matha அவர்கள், அடிமைமுறையில் அல்லலுற்ற கிறிஸ்தவர்கள் மற்றும், முஸ்லிம்களை மீட்டெடுத்து, அவர்களுக்குச்  சுதந்திரமான வாழ்வு வழங்குவதற்கு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டிருந்தார் என்றும், இவர் இப்பணியை தனியே செய்ய விரும்பாமல் ஒரு சபையைத் துவக்கினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்துறவு சபையினர் தங்களின் இப்பணிகளை, மற்ற திருஅவை நிறுவனங்களின் ஒத்துழைப்போடு ஆற்றுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தற்போது பல்வேறு சூழல்களில், சிலநேரங்களில் வெளிப்படையாகவும், சிலநேரங்களில் மறைவாகவும் சமய சுதந்திரம் நசுக்கப்படுகின்றது மற்றும், மீறப்படுகின்றது என்றும் கூறினார்.

இக்காலத்தில் எல்லா நாடுகளிலும், ஏன் வத்திக்கானிலும்கூட, நன்மையும் தீமையும், நிலவுகின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சபையினர் தங்களின் தனிவரத்தைத் தொடர்ந்து ஆற்றுமாறும் ஊக்கப்படுத்தினார்.

Comments are closed.