திருஅவையின் இரக்கப் பண்பை வெளிப்படுத்துங்கள்

ஒரு சிறந்த படைப்பாற்றல் நம்மை இரக்கத்தின் திருத்தூதர்களாகவும், இரக்கத்தின் கவிஞர்களாகவும் மாற்றுகிறது என்றும், ஆகவே இரக்கத்தின் கவிதை இன்று நமக்குத் தேவைப்படுகின்றது என்றும், ஏப்ரல் 28, இவ்வியாழனன்று, போலந்தின் லோட்ஸ் உயர்மறைமாவட்டத் திருப்பயணிகளுக்குத் திருப்பீடத்தில் உரையாற்றியபோது திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

தங்கள் மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை நிறைவு செய்ய உரோம் நகருக்குத் திருப்பயணமாக வந்திருக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் லோட்ஸ் திருப்பயணிகளை வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ், அவர்களுக்கு ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார்.

திருப்பயணம் என்பது, ஒருங்கிணைந்து பயணிக்கும் திருஅவையின் அழகான உருவமாகும் என்றும்,  இது உண்மையில் திருத்தூதர்களின் வழிகளில் நடந்து, சகோதரிகள் மற்றும் சகோதரர்களைக்கொண்ட குடும்பமாக, வெவ்வேறு பங்குகள், சமுதாயங்கள் மற்றும் திருஅவை சார்ந்த அருள்பணியாளர்கள், விசுவாசிகள், திருமணமான மற்றும் அர்ப்பண வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்த குழுக்களிலிருந்து வருகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், துன்புறும் எத்தனையே பேர் காயமடைந்து தரையில் விழுகின்றனர் என்றும், அவர்கள் எல்லாருமே கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் தனக்குள்ளேயே சில காயங்களைச் சுமக்கிறார்கள் என்றும், ஆகவே அவர்களுக்கு நமது இரக்கம் தேவைப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயாளிகள், முதியவர்கள், வேலையில்லாதவர்கள், வீடற்றவர்கள், புலம்பெயர்ந்தோர், ஏழைகள், துன்பப்படுபவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவருக்கும் இரக்கமுடன் தங்கள் இல்லங்களையும் வளங்களையும் திறப்பவர்களை தான் ஆசீர்வதிப்பதாகத் தெரிவித்தார்.

இறையியல் மற்றும் நற்செய்திப் பணியின் ஒளியில் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பயணிக்கவும், பொது இறைவேண்டலில் ஈடுபடுவது,  இறைவார்த்தையைக் கேட்பது, சகோதரத்துவ வாழ்வில் ஒன்றிணைந்து சான்றுபகர்வது ஆகியவற்றில் செழித்து வளரவும் அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.