வாசக_ மறையுரை (ஏப்ரல் 29)

பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 5: 34-42
II யோவான் 6: 1-15
உணவளிக்கும் ஆண்டவர்
உணவு குறையவில்லை:
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த இறையடியாரின் வீடு. ஒருநாள் இரவு வேளையில் அவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது. ‘இந்த நேரத்தில் யார் நம்முடைய வீட்டின் கதவைத் தட்டுவது?’ என்று அவர் கதவைத் திறந்து பார்த்தபோது, வெளியே பாதசாரிகள் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள்.
“கோயிலுக்கு நடைபயணம் சென்றுகொண்டிருக்கின்றோம். நன்றாக இருட்டிவிட்டதால் இனிமேல் பயணத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று, இரவில் உங்களுடைய வீட்டின் ஒரு மூலையில் தங்கி ஓய்வெடுத்துவிட்டுப் போகலாம் என்று இங்கு வந்திருக்கின்றோம். எங்களோடு குழந்தைகளும் பெண்களும் வந்திருக்கின்றார்கள் என்பதால்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். தயவுசெய்து எங்கள்மீது இரக்கம் காட்டுங்கள்” என்றார் பாதசாரிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர்.
“வீட்டில் போதுமான இடம் இருக்கின்றது. அதனால் நீங்கள் இவ்விரவில் இங்கே தாராளமாகத் தங்கிக்கொள்ளுங்கள்” என்று, இறையடியார் அவர்களை உள்ளே வரவேற்றார். பின்னர் அவர் அவர்களிடம், “இரவு உணவு முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டபோது, அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். அவர்கள் அமைதியாக இருந்ததைக் கண்டு, அவர்கள் எதுவும் சாப்பிடவில்லை என உறுதி செய்துகொண்ட அவர், சமயலறைக்குச் சென்றார். வீட்டில், வந்திருந்த அத்தனை பேருக்கும் உணவு கொடுக்கும் அளவுக்குப் போதுமையான உணவுப் பொருள்கள் இல்லை என்பதை அறிந்த அவர் கடவுளிடம், “கடவுளே! இந்த உணவுப் பொருள்களிலிருந்து இவர்களுக்குப் போதுமான உணவு கிடைக்கச் செய்தருளும்’ என்று வேண்டிவிட்டு, உணவு சமைத்து, அவர்களுக்குப் பரிமாறினார்.
அவர் வேண்டிக் கொண்டது போன்றே, வந்திருந்த பத்தொன்பது பேரும் உண்ணும் அளவுக்கு அவர்களுக்கு உணவு கிடைத்தது. இதனால் இறையடியார் இறைவனின் பேரன்பை நினைத்துப் பார்த்து, அவருக்கு நன்றி சொன்னார்.
ஆம், இறையடியாரின் வீட்டிற்குப் பசியோடு வந்த பாதசாரிகளுக்கு இறைவன் வயிறார உணவளித்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையில் ஆண்டவர் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு செய்ததாக நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறும் ஒரே அருளடையாளம், அவர் ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததுதான் (மத் 14: 13-23; மாற் 6: 30-46; லூக் 9: 10-17). இயேசுவிடம் சென்றால் நோய்நோடியிலிருந்து விடுதலை கிடைக்கும்; இன்ன பிற தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் ஒருவிதமான எதிர்பார்ப்போடு இயேசுவைப் பின்தொடர்ந்தாலும், அவர் அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு செய்த இந்த அருளடையாளத்தின் மூலம், தாமே இறைமகன், மெசியா, வாழ்வளிக்கும் உணவு என்பதை இயேசு எண்பிக்கின்றார். ஆனால் அவர்கள் உலகக் கண்ணோட்டத்தோடு இயேசுவை அணுகுவது வேடிக்கையாய் இருக்கின்றது.
முதல் வாசகத்தில், திருத்தூதர்கள் மெசியாவாம் இயேசுவின் பொருட்டு அவமதிப்புக்கு உள்ளானதைக் குறித்து மகிழ்ச்சியடைவதைப் பற்றி வாசிக்கின்றோம். ஒருகாலத்தில் திருத்தூதர்களும் இயேசுவை உலகக் கண்ணோடத்தோடுதான் அணுகினார்கள். ஆனால், அவர்கள் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு, அவரை மெசியா என ஏற்றுக்கொண்டு, அவரைப் பற்றிச் சான்று பகர்கின்றார்கள்.
ஆதலால், நாம் இயேசு நமது வயிற்றுக்கு உணவளிப்பவராக மட்டும் எண்ணாமல், ஆன்மாவிற்கும் உணவளிப்பவர் என்பதை உணர்ந்து, அவர்மீது ஆழமான பற்றுக்கொண்டு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 உணவின்றித் தவிப்போருக்கு உணவளிப்பது நமது கடமை
 உணவைவிட உடையும், உடையை விட உயிரும் உயிரை விட ஆன்மாவும் பெரிது என்பதை நாம் மறக்கவேண்டாம்
 ஆண்டவரைத் தேடுவோருக்கு எதுவும் குறைவுபடாது.
இறைவார்த்தை:
‘எல்லா உயிர்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றுக்கு உணவளிக்கின்றீர்’ (திபா 145:15) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நமக்கு வயிற்றுக்கு உணவும், ஆன்மாவிற்கு உணவும் தரும் ஆண்டவரை நாடி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.