போரின் மனநிலையை அமைதிக்கான திட்டங்களாக மாற்றுங்கள்

வாஷிங்டனில் நடைபெற்று வரும் இஸ்பானிய மொழிபேசும் மக்களுக்கான பணிகள் தொடர்பான அமெரிக்கத் தேசிய கத்தோலிக்க மாநாடு ஒன்றிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் உறவு பாலங்களை உருவாக்கக்கூடிய கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்குமாறு பங்கேற்பாளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Roots and Wings 2022 என்ற தலைப்பில், “இறைவாக்குக் குரல்கள்: ஒரு புதிய சகாப்தத்திற்கான பாலமாக இருப்பது” என்ற மையப்பொருளில் ஏப்ரல் 26 முதல் 30 வரை நடைபெறும் இந்த மாநாட்டிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து மனிதகுலத்தையும் பெரும் துன்பம் மற்றும் துயரத்தால் பீடித்துள்ள ஒரு தொற்றுநோயிலிருந்து இன்னும் வெளிவராமல், நாம் ஒரு ஆபத்தான காலத்தில் வாழ்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு போரும் அநீதியிலிருந்து பிறக்கிறது என்றும், சில சமயங்களில் நாம் நமது குடும்பங்களிலும் சமுதாயங்களில் மௌனமாகப் போராடுவது உட்பட; அவைகள் அனைத்துமே அநீதியில் பிறந்தவைகள்தாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்பங்கள், சமுதாயங்கள் என அனைத்து நிலைகளிலும் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவரக்கூடிய செயல்களுக்கு வழிவகுக்கும் வகையில், சிந்தனையை ஒளிரச் செய்து, சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் கட்டமைப்புகளை மாற்றி உறவு பாலங்களை உருவாக்கக்கூடிய  கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சிந்திக்கும்படியும் விசுவாசிகளை திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எனக்கு அமைதி வேண்டும், உங்களுக்கு அமைதி வேண்டும், உலகிற்கு அமைதி தேவை, அமைதியை சுவாசிப்பது ஆரோக்கியமானது என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியை ஏற்படுத்துவதில் கிறிஸ்தவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளார்

Comments are closed.