இத்தாலிவாழ் இலங்கை திருப்பயணிகளுக்கு திருத்தந்தை உரை

இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்குமுன்னர், உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்புலமாக அமைந்துள்ள உண்மைகள் குறித்த விவரங்களை வெளிச்சத்திற்கு கொணருமாறு, அந்நாட்டு அதிகாரிகளுக்கு உருக்கமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 25, இத்திங்கள் நண்பகலில், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் அமர்ந்திருந்த 3,500 இலங்கை மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை மற்றும், போரில், குறிப்பாக, பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியாகியிருக்கும் அனைவருக்காவும் இன்று செபிப்போம் என்று கூறினார்,

2019ம் ஆண்டில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றதன் நினைவாக, இத்திங்களன்று, கொழும்பு பேராயர் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில், புனித பேதுரு பெருங்கோவிலில் அமர்ந்திருந்த, இத்தாலியில் வாழ்கின்ற இலங்கை கத்தோலிக்கரைச் சந்தித்த திருத்தந்தை, அந்நாட்டு கத்தோலிக்கரின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி தெரிவித்தார்.

“உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என்ற, உயிர்த்த இயேசுவின் வாழ்த்தால் இம்மக்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியானவர்கள் மற்றும், காயமுற்றோருக்காக, இன்று திருப்பலி நிறைவேற்றி செபித்தீர்கள் என்று அம்மக்களிடம் கூறியதோடு, தானும் அவர்களோடு ஒருமைப்பாட்டுணர்வுகொண்டு, அவர்களுக்காகச் செபித்ததாகத் தெரிவித்தார்.

அதிகாரிகளுக்கு அழைப்பு

2015ம் ஆண்டு சனவரியில் இலங்கைக்கு தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்நாட்டின் ஆட்சியாளர்கள், சமுதாய மற்றும், கல்வி நிறுவனங்களுக்குப் பொறுப்பான அனைவருக்காகவும் செபிப்போம், அதன் வழியாக, நாட்டில் தற்போது நிலவும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, அவர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள் மற்றும், ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

நீதியின் மீதுள்ள அன்பால், உங்கள் நாட்டு மக்கள் மீதுள்ள அன்பால், அந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் குறித்த விவரங்களை, ஒரு தடவை அறிவிக்கவேண்டும் என்றும், இது உங்களின் மனசாட்சி மற்றும், நாட்டிற்கு அமைதியைக் கொணரும் என்று, திருத்தந்தை உறுதிபடக் கூறினார்.

கிறிஸ்துவின் சிலுவையும் உயிர்ப்பும்  இருள்படர்ந்த சூழலில் நம்பிக்கையின் ஒளியாக உள்ளன, மனிதர்களால் ஆற்றப்படும் சில பயங்கரமான மற்றும் அறிவற்ற செயல்கள், சாத்தானின் வேலை என்பது தெளிவாகத் தெரிகின்றது எனவும், இதனாலேயே குற்றமற்ற இறைமகன், நம்மை மீட்பதற்காக சிலுவை மரணத்தை ஏற்றார் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில், அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்தோர் சிலரும் இருந்தனர்.

கர்தினால் இரஞ்சித் திருப்பலி

மேலும், இத்திங்கள் காலை பத்து மணியளவில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இம்மக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றியபின்னர் செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்தார். இலங்கையில் நீதியும் மாற்றமும் அவசியம் என்று கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.

Comments are closed.