இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகத்தில், “இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று, “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளை யெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என திருத்தூதர்களிடம் கூறியதைக் காண்கின்றோம்.
‘உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே. 1: 19) என்ற இறைவார்த்தையை நாம் இக்கட்டான நேரங்களில் நினைவு கூர்ந்து நம்பிக்கைக் கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 34:4-ல், “துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்” என கூறப்பட்டுள்ளது.
நெருக்கடியான நேரங்களில் எல்லாவகையான அச்சத்தினின்றும் ஆண்டவர் நம்மை விடுவிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த கோடை காலத்தில் கடுமையான வெயிலில் திறந்த வெளியில் பணிபுரிவோர் குறிப்பாக கட்டிட வேலை செய்வோர், சாலை பணியாளர்கள், விவசாயிகள், கடின வேலை புரிபவர்கள் அனைவருக்காகவும் செபிப்போம். அவர்கள் அனைவரின் நல் ஆரோக்கியத்துக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் மறுபடியும் பரவிவரும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.