உலகம் காயினைத் தெரிவுசெய்துள்ளது

உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான போர், உலகில் இடம்பெறும் மற்ற பெருந்துயரங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், நம்பிக்கையில் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும் என கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குச் சொல்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலிய அரசின் RAI தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘A Sua Immagine’ அதாவது அவரின் சாயலில் என்ற நிகழ்ச்சிக்கு, ஊடகவியலாளர் Lorena Bianchetti அவர்களுக்கு அளித்துள்ள நீண்டதொரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போர், பெருந்தொற்று, பெருந்துயரங்களின் மத்தியில் நம்பிக்கையைக் காப்பது, பெண்களின் மனஉறுதி, தனது தலைமைப்பணி உட்பட பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை வழங்கிய இப்பேட்டி, ராய் தொலைக்காட்சியில், ஏப்ரல் 15, கடந்த புனித வெள்ளியன்று ஒளிபரப்பானது.

கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கக்கூடாது எனவும், நம்பிக்கை காத்திருக்க வைக்கும், ஆயினும், அது ஒருபோதும் ஏமாற்றாது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, போர் இடம்பெறுவதற்கு மத்தியில் சிறப்பிக்கப்படுகின்ற இவ்வாண்டு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவில், மகிழ்ச்சி, ஆறுதல் மற்றும், நம்பிக்கை ஆகியவற்றின் கண்ணீர்களை நாம் கேட்கவேண்டும் என்று கூறினார்.

நாம் கடவுளை நோக்கி அதிகமாக அழுகுரலை எழுப்பவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது, மனித சமுதாயம் அழுகின்ற முறையை மறந்துவிட்டது, எவ்வாறு அழுவது என்பதை, திருத்தூதர் பேதுருவிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்றும் கூறியத் திருத்தந்தை, யாராவது ஒருவர் துன்புறும்போது பேசக் கூடாது என்பதை நான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

உலகில், குறிப்பாக, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்த தன் சிந்தனைகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 47 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள், குறிப்பாக பெண்களும், சிறாரும், உக்ரைனைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர் என ஒரு கணக்கெடுப்பு கூறியுள்ளதைக் குறிப்பிட்டார்.

பொறாமையால் தன் உடன்பிறப்பைக் கொலைசெய்த காயினை உலகம் தெரிவுசெய்துள்ளது, ஆயினும், கடவுள் நம்மைக் காப்பாற்றுவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்றும் திருத்தந்தை கூறினார்.

உலகில் போரினால் துன்புறும் மக்களோடும், புலம்பெயர்வோர் மற்றும், குடிபெயர்வோரோடும், தோழமையுணர்வுகொண்டு, அவர்களை மாண்போடு நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வெறுப்பு என்ற நோய் குறித்து எச்சரிக்கை விடுத்ததோடு, நம் ஆண்டவர் இயேசுவும் எகிப்தில் புலம்பெயர்ந்தவராய் இருந்தார் என்றுரைத்தார்.

Comments are closed.