வாசக மறையுரை ஏப்ரல் 20

பாஸ்கா எண்கிழமை
புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 3: 1-10
II லூக்கா 24: 13-35
வல்லமைமிக்க இயேசுவின் திருப்பெயர்
இயேசுவின் திருப்பெயர் செய்த மாயம்:
தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாது மறைப்பணியாளரான ஈ.பி. ஸ்காட் (E.P. Scott) என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு பழங்குடி இனத்திற்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார். அவர் அவர்களுடைய பகுதிக்குள் நுழைந்தபோது, கையில் ஈட்டியோடும் எறிவாளோடும் சிலர் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவரைத் தாக்குவதற்கு முயன்றனர்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த வயலினை எடுத்துக் கண்களை மூடி, ‘All Hail the Power of Jesus’ என்ற பாடலை வாசிக்கத் தொடங்கினார். அவர் அந்தப் பாடலை வாசித்து முடிந்ததும், கண்களைத் திறந்து பார்த்தார். அப்போது அவரைத் தாக்குவதற்காகக் கொடிய ஆயுதங்களோடு அவரைச் சுற்றி இருந்தவர்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்ததைக் கண்டு அவர் மலைத்துப் போனார்.
ஆம், இயேசுவின் திருப்பெயர் கரடுமுரடாக இருந்த அந்தப் பழங்குடி இனத்தவரை முற்றிலுமாக உருக்கியிருந்தது. இதன் பிறகு ஈ.பி. ஸ்காட் அந்த மக்கள் நடுவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிறப்பான முறையில் பணி செய்தார்.
இயேசுவின் திருப்பெயர் வல்லமை மிக்கது. அது எப்படிப்பட்டவரையும் உருக்கிவிடும். அதைதான் இந்த நிகழ்விலிருந்து நாம் அறிந்துகொள்கின்றோம். இன்றைய முதல் வாசகம் இயேசுவின் திருப்பெயரால் ஆகும் வல்ல செயலைப் பற்றிக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
யூதர்கள் ஒருநாளைக்குக் காலை ஒன்பது மணி, நண்பகல் பன்னிரண்டு மணி, பிற்பகல் மூன்று மணி என மூன்று வேளை கடவுளிடம் வேண்டுவார்கள். அந்த அடிப்படையில் பிற்பகல் மூன்று மணிக்கு இறைவனிடம் வேண்டுவதற்காகப் பேதுருவும் யோவானும் கோயிலுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் பிறவிலேயே கால் ஊனமுற்ற ஒரு பிச்சைக்காரரை எதிர்கொள்கின்றார்கள்.
பிச்சைக்காரர்கள் கோயிலுக்கு முன்பாக அமர்ந்து பிச்சை கேட்பதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. அது என்னவெனில், இறைநம்பிக்கையோடு கோயிலுக்கு வரும் பலருக்கு பிச்சைக்காரர்கள் அல்லது வறியவர்களுக்குத் தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணம் உண்டு. இதை அறுவடை செய்வதற்காகவே பிச்சைக்காரர்கள் கோயில் வாசலில் அமர்ந்து கொள்கின்றார்கள்.
பேதுருவும் யோவானும் கோயிலுக்கு வரும் வேளையில், அழகு வாயில் என்ற இடத்தில் இருந்த கால் ஊனமுற்ற பிச்சைக்காரர் அவரிடம் பிச்சை கேட்கிறார். அப்போது பேதுரு, “…. நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று சொல்லி, அவரது வலக்கையைப் பற்றித் தூக்கிவிட, அவர் எழுந்து நடக்கத் தொடங்குகின்றார். ஆம், இயேசுவின் திருப்பெயர் கால் ஊனமுற்றிந்த மனிதரை எழுந்து நடக்க வைக்கின்றது.
“நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவா 14:26) என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னதைப் பேதுரு நன்றாகவே நினைவில் வைத்திருந்திருப்பார். அதனால்தான் அவர் இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி கால் ஊனமுற்றவரை நலமாக்குகின்றார். நாமும் இயேசுவின் திருப்பெயரின் வல்லமையை உணர்ந்தவர்களாய், அதை நம்பிக்கையோடு உச்சரித்து, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
 இயேசுவின் பெயருக்குப் பேய்களும் அடிபணியும் (லூக் 10:17)
 நாம் மீட்புப் பெற இயேசுவின் திருப்பெயரே கொடுக்கப்பட்டுள்ளது (திப 4:12)
 எல்லாவற்றையும் இயேசுவின் திருப்பெயரால் செய்வோம் (கொலோ 3: 17)

Comments are closed.