மார்ச் 20 : நற்செய்தி வாசகம்

மார்ச் 20 : நற்செய்தி வாசகம்
மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9
அக்காலத்தில்
சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.
மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
“நீங்களும் மனம்மாற வேண்டும்”
தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு
I விடுதலைப் பயணம் 3: 1-8a, 13-15
II 1 கொரிந்தியர் 10: 1-6, 10-12
III லூக்கா 13: 1-9
“நீங்களும் மனம்மாற வேண்டும்”
மனம்மாறியவர்களை கடவுள் மன்னிக்கும் முறை:
ஒருவர் தனது மகிழுந்தில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்துக் காவலர் அவரிடம், “நீங்கள் குறிக்கப்பட்ட வேகத்தை விடவும் அதிவேகத்தில் சென்றதால், அதற்குரிய அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். ஆனால், அதை இங்கு அல்ல, நீதிமன்றத்தில் செலுத்தவேண்டும்” என்றார். மகிழ்ந்தை ஓட்டி வந்தவரும், சரி என்று கேட்டுக்கொண்டு, நீதிமன்றத்தில் இருந்த குற்றவாளிக் கூண்டில் போய் நின்றார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வண்டி ஓட்டுநரிடம், “நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறி, உங்களுடைய வண்டியில் அதிவேகத்தில் சென்றீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்றார். “ஆமாம் ஐயா! நான் என்னுடைய தவற்றை ஒப்புக் கொள்கிறேன்” என்றார் வண்டி ஓட்டுநர். அவர் இவ்வாறு சொன்னதும்தான் நீதிபதிக்குத் தெரிந்தது, குற்றவாளிக் கூட்டில் இருப்பவர் ஓர் ஆன்மிகப் பேச்சாளர் என்று. அதனால் நீதிபதி அவரிடம், “நீங்கள் உங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ஐந்நூறு உரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும்” என்றார்.
இப்படிச் சொல்லிக்கொண்டே நீதிபதி, தனது மேல் பையில் இருந்த ஐந்நூறு உரூபாயை எடுத்து, அதைக் காசாளரிடம் கொடுத்து, “இந்தப் பணத்தை நான் இவருடைய சார்பாகக் கொடுக்கின்றேன்” என்றார். இதைப் பார்த்துவிட்டு, நீதிமன்றத்தில் இருந்த யாவரும் மலைத்துப் போயினர். பின்னர் எல்லாரும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தபோது வண்டி ஓட்டுநர், அதாவது ஆன்மிகப் பேச்சாளர் நீதிபதியிடம் சென்று, “கடவுள், ஒருவருடைய பாவத்தை மன்னிக்கும்போது இப்படித்தான் தாராளமாக மன்னிக்கின்றார்” என்றார்.
ஆம், கடவுள் மன்னிப்பதில் தாராளமானவர். அப்படிப்பட்டவரிடம் நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரிடம் திரும்பவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது. தவக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு இதே செய்தியைத்தான் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
பிறரைக் குற்றவாளியை எனத் தீர்ப்பிடுதல்:
பலருக்குத் தங்களுடைய கண்ணில் மரக்கட்டையே இருந்தாலும், அதெல்லாம் அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது; அடுத்தவர் கண்ணில் இருக்கும் துரும்பே அவர்களுக்குப் பெரிதாகத் தெரியும்! இன்னும் ஒருசிலருக்கு மற்றவரிடம் குற்றம் காண்பதில் அலாதியான இன்பம் ஏற்படும். இத்தகைய மனிதர்கள் இன்று, நேற்று அல்ல, இயேசுவின் காலத்திலும் இருந்தார்கள்.
நற்செய்தியில் இயேசுவிடம் வரும் சிலர், பலிசெலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியைச் சொல்கிறார்கள். இயேசுவிடம் வந்தவர்கள் அவரிடம் இச்செய்தியைச் சொன்னதன் மூலம், கொல்லப்பட்ட கலிலேயர்கள் பாவிகள்; அதனால்தான் அவர்கள் பிலாத்துவால் கொல்லப்பட்டார்கள் என்பதை மறைமுக அவரிடம் உணர்த்த விரும்பினார்கள். ஏனெனில் பாவிகளுக்குத்தான் இதுபோன்று நடக்கும் என்ற நம்பிக்கை அன்று யூதர்களிடம் இருந்தது (யோபு 4:7; யோவா 9:2).
பிலாத்துவால், பலிசெலுத்திக்கொண்டிருந்த கலிலேயர்கள் கொல்லப்பட்டார்கள். அதனால் அவர்கள் பாவிகளாகத்தான் இருக்கவேண்டும் என்பதைக் கூற விழைந்தவர்களிடம் இயேசு, சீலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் இறந்த செய்தியைச் சொல்கின்றார். இயேசு இச்செய்தியைத் தன்னிடம் வந்தவர்களிடம் கூறுவதன் மூலமாக நம் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தி என்ன? அதைப் பற்றித் தொடர்ந்து நாம் சிந்திப்போம்.
ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும்.
‘அவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது; அவர் பாவம் செய்திருக்க வேண்டும். இவருக்குத் தீராத நோய் வந்திருக்கின்றது. இவர் பாவம் செய்யாமல், இப்படியெல்லாம் நோய் வராது’ என்று இன்றைக்கும்கூட ஒருசிலர் பேசித்திரிவதை நாம் பார்க்கலாம். இத்தகைய மனநிலையோடு வந்தவர்களிடம் நற்செய்தியில் இயேசு, “மனம்மாறாவிட்டால் நீங்களும் அப்படியே அழிவீர்கள்” என்கிறார். இதன்மூலம் ஒவ்வொருவரும் மனமாறவேண்டும். அப்படி மனம்மாறாவிட்டால் அழிவது திண்ணம் என்பதை அவர் எடுத்துக் கூறுகின்றார்.
கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகச் செய்த பாவங்களைப் பட்டியலிடுகின்றார். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகப் பல பாவங்களைச் செய்திருந்தாலும், நான்கு பாவங்கள் மிகப்பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன. சிலைவழிபாடு, ஒழுக்கக்கேடு, ஆண்டவரைச் சோதித்தல், ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்தல் ஆகிய நான்கு பாவங்கள்தான் பெரிய பாவங்களாகக் கருதப்படுகின்றன. பவுல் இவற்றைக் கூறிவிட்டு, இவையாவும் உங்களுக்கு எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் எழுதப்பட்டுள்ளன என்கிறார். ஆதலால், இஸ்ரயேல் மக்களுக்கு நேர்ந்த அழிவு நமக்கும் ஏற்படாத வண்ணம் இருக்க, இதுவே தகுந்த காலம் (2 கொரி 6:2) என்று நாம் மனம்மாறுவது சிறந்தது.
கண்டவர், கேட்டவர், இரக்கம் கொண்டவர்:
மனம்மாறவிட்டால் அனைவரும் அப்படியே அழிவீர்கள் என்று இயேசு சற்றுக் கடினமான வார்த்தைகளைச் சொன்னாலும், அதற்கு அடுத்ததாக அவர், கடவுள் பாவிகள் மனம்மாறுவதற்காக எவ்வளவு பொறுமையோடு இருக்கின்றார் என்ற செய்தியைச் சுட்டிக் காட்டுகின்றார். அதற்காக அவர் கையாளும் உவமைதான் அத்திமர உவமை ஆகும். அத்திமரத்தில் மூன்று ஆண்டுகள் கனிகள் இல்லை. அதனால் அதனை வெட்டிவிடுமாறு தோட்டத்தின் உரிமையாளர் சொல்கின்றபோது, பணியாளர் அவரிடம், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கச் சொல்கிறார். இதன்மூலம், இயேசு பாவிகள் மனம்மாறவேண்டும் என்பதற்காக ஆண்டவர் பொறுமையோடு இருக்கின்றார் என்ற செய்தியைக் கூறுகின்றார். இதே கருத்தினைத்தான் பேதுருவும் தனது இரண்டாம் திருமுகத்தில் கூறுவார் (2 பேதுரு 3:9).
விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், கடவுள் பாவிகள் மட்டில் பொறுமையோடு இருக்கின்றார் என்பதையும் கடந்து, அவர் தன் மக்கள்மீது பரிவும் இரக்கமும் கொண்டவராக இருக்கின்றார் என்பதை மிக அழகாகக் காட்டுகின்றது. முட்புதர் நடுவில் மோசேக்கு காட்சியளிக்கின்ற ஆண்டவர், எகிப்தில் என் மக்கள் துன்பங்களை நான் கண்களால் கண்டேன். அவர்கள் எழுப்பும் குரலைக் காதால் கேட்டேன். அவர்களை விடுவிக்க இறங்கி வந்திருக்கின்றேன் என்கிறார். இதுதான் கடவுள் தன் மக்கள்மீது கொள்ளும் பரிவும் இரக்கமுமாக இருக்கின்றது.
இத்தகைய கடவுளிடம் நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்தவர்களாய், மனம்திருந்தி வந்தால், அவர் நம்மை மன்னிப்பது உறுதி. எனவே, நம்மைக் காணும், நமது குரலைக் கேட்கும், நம்மீது இரங்கும் ஆண்டவரிடம் மனம் திரும்பி வந்து, அவரது ஆசியைப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
‘தீயோர் சாக வேண்டும் என்பது என் விருப்பம் அன்று, அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதே என் விருப்பம்’ (எசே 33:11) என்பார் ஆண்டவர். எனவே, நாம் மனம்மாற வேண்டும் என்பதற்காகப் பொறுமையோடும் இரக்கத்தோடும் பரிவோடும் இருக்கும் ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.